ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு ஏரி மண்ணா: குமுறும் எம்.எல்.ஏ.,
ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு ஏரி மண்ணா: குமுறும் எம்.எல்.ஏ.,
ADDED : மே 23, 2025 04:28 AM

கலசப்பாக்கம்: திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த ஒரு வாரமாக ஜமாபந்தி நடக்கிறது. இதில், கலசப்பாக்கம் தாலுகா அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை, ஜமாபந்தி நிறைவு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் கலசப்பாக்கம், தி.மு.க., - எம்.எல்.ஏ., சரவணன் பேசியதாவது:
ஒரு ஏழை விவசாயி, தன் நிலத்திற்கு ஒரு லாரி மண் வேண்டுமென மனு அளித்தால், அவர்களுக்கு அனுமதி தருவது இல்லை. ஆனால், சட்ட விரோதமாக ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு, 500 முதல் 1,000 லாரி லோடு வரை, ஏரியிலிருந்து மண் எடுத்துச்செல்ல, அரசு விதிகளை மீறி அனுமதி வழங்கப்படுகிறது.
வருவாய்த் துறையினர், ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, ஏரி மண் எடுத்துச்செல்ல அனுமதிக்கின்றனர்.
இதுகுறித்து கிராம மக்கள், என் காரை வழிமறித்து நியாயம் கேட்கின்றனர். இதுபோன்று, தமிழகம் முழுதும் வருவாய்த் துறையினர் செயல்படுகின்றனர். அவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அரசு விழாவில், தி.மு.க., - எம்.எல்.ஏ., ஒருவரே, வருவாய்த் துறையினர் மீது இப்படி குற்றஞ்சாட்டி பேசியிருப்பது, அதிகாரிகள் மட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.