தமிழகத்தில் 695 திட்டங்களுக்கு நிலம் எடுப்பு; 44,383 ஏக்கர் நிலுவை: வருவாய் துறை தகவல்
தமிழகத்தில் 695 திட்டங்களுக்கு நிலம் எடுப்பு; 44,383 ஏக்கர் நிலுவை: வருவாய் துறை தகவல்
ADDED : மே 27, 2025 07:05 AM
சென்னை : 'தமிழகத்தில், மத்திய - மாநில அரசுகளின், 695 திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதில், இன்னும், 44,383 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டி உள்ளது' என, வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் தொழில் சார்ந்த திட்டங்களுக்கும், மாநில நெடுஞ்சாலைத்துறை, தேசிய நெடுஞ்சாலை துறை, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், ரயில்வே மற்றும் விமான நிலைய திட்டங்கள், தொழிற் பூங்காக்கள் போன்றவற்றை செயல்படுத்த நிலம் தேவை.
திட்டங்களை செயல்படுத்தும் துறைகள், தங்களுக்கு தேவையான நிலங்களை, வருவாய் துறை உதவியுடன் தேர்வு செய்யும்.
695 திட்டங்கள்
ஒவ்வொரு துறைக்கும் தேவையான நிலங்களை கையகப்படுத்தி கொடுக்கும் பொறுப்பை, வருவாய் துறை மேற்கொள்கிறது.
இதற்காக, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு, நிலம் எடுக்க, தனித்தனி பிரிவுகளை வருவாய் துறை ஏற்படுத்தும்.
கடந்த, 2013ல் நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்துதல், வெளிப்படையான இழப்பீடு வழங்கல் மறுவாழ்வு சட்டத்தின் கீழ், நிலம் எடுக்கப்படும்.
தற்போதைய நிலவரப்படி, 695 திட்டங்களுக்கு, நிலம் கையகப்படுத்தி கொடுக்கும் பணிகளை வருவாய் துறை செய்து வருகிறது.
உத்தரவு
இதுகுறித்து வருவாய் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில், 695 திட்டங்களுக்கு, ஒரு லட்சத்து 23,585 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி கொடுக்கும்படி கோரிக்கை வந்தது. அதில், 79,202 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள, 44,383 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் நிலுவையில் உள்ளன.
தேவையான சட்ட திருத்தங்கள் செய்தும், உத்தரவுகள் பிறப்பித்தும், நிலம் கையகப்படுத்தும் பணிகளில் தாமதம் ஏற்படுகிறது. பொதுமக்கள் எதிர்ப்பு, வழக்குகள் காரணமாக, இப்பணிகள் நிலுவையில் உள்ளன.
இதில், வழக்குகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டு இறுதிக்குள், 44,383 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி கொடுக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.