தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் எடுப்பு; தாசில்தார் அலுவலகங்கள் கலைப்பு
தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் எடுப்பு; தாசில்தார் அலுவலகங்கள் கலைப்பு
ADDED : அக் 01, 2024 12:23 AM

சிவகங்கை: தேசிய, மாநில நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கான நில எடுப்பு தனி தாசில்தார் அலுவலகங்களை குறைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தேசிய, மாநில நெடுஞ்சாலை துறை மூலம் ரோடு விரிவாக்கம், பைபாஸ் ரோடு, தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சிவகங்கை வழியாக மதுரை- ராமேஸ்வரம் (என்.எச்.,49) தேசிய நெடுஞ்சாலைக்கென மானாமதுரையிலும், திருச்சி-- ராமநாதபுரம் (என்.எச்.,210) ரோட்டிற்காக தேவகோட்டையிலும், மேலுார் - திருப்புத்துார் வரை (என்.எச்.338) மற்றும் கொட்டாம்பட்டி முதல் காரைக்குடி வரையிலான (என்.எச்.,383) ரோடு பணிகளுக்கான திருப்புத்துாரில் 3 அலுவலகங்களும், மானாமதுரை -- தஞ்சாவூர் ரோடுக்கு (என்.எச்.,.226) சிவகங்கையிலும் நில எடுப்புக்கு என 6 தனி தாசில்தார் அலுவலகங்கள் உள்ளன.
ஒரு அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர், சர்வேயர், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் என 7 முதல் 10 பேர் வரை பணிபுரிந்தனர்.
இந்நிலையில் 6 இடங்களில் இருந்த அலுவலகங்களை திருப்புத்துாரில் 2, மானாமதுரை ஆகிய அலுவலகங்களுடன் இணைத்து விட்டு மற்ற 3 அலுவலகங்களை நேற்றுடன் கலைத்து விடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் திருப்புத்துார், மானாமதுரையில் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் அலுவலகங்களை கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு மாற்றிவிடுமாறும் தெரிவித்துள்ளது.இது போன்ற நடைமுறையை அனைத்து மாவட்டங்களிலும் பின்பற்ற நில நிர்வாக ஆணையர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
எதிர்ப்பு:
தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் தமிழரசன் கூறியதாவது:
சிவகங்கைக்கென நில எடுப்பு தாசில்தார் பணியிடம் இன்றி துாத்துக்குடி, புதுக்கோட்டையுடன் இணைத்து விட்டனர். அலுவலகங்களை ஒருங்கிணைக்கும்போது நிலத்திற்கான இழப்பீடு பெறுவதில் மக்களுக்கு சிரமம் ஏற்படும்.
எனவே நில எடுப்பு தனி தாசில்தார் அலுவலகத்தை 5 ஆக சிவகங்கையில் உயர்த்த வேண்டும் என கலெக்டர் ஆஷா அஜித் மூலம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.