ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் கோவை, மதுரை மெட்ரோ திட்டம் நிலம் கையகப்படுத்தும் பணி துவக்கம்
ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் கோவை, மதுரை மெட்ரோ திட்டம் நிலம் கையகப்படுத்தும் பணி துவக்கம்
ADDED : ஆக 08, 2025 01:11 AM

சென்னை:“செ ன்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம், கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு, நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன,” என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் சித்திக் தெரிவித்தார்.
ஒப்புதல் 'ஊபர்' செயலி வாயிலாக, மெட்ரோ ரயில் டிக்கெட் பெறும் வசதியை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் சித்திக், நந்தனத்தில் நேற்று துவக்கி வைத்தார்.
அறிமுக சலுகையாக, 'ஊபர்' செயலி உபயோகிப்பாளர்கள், இந்த மாதம் முழுதும், மெட்ரோ டிக்கெட்டுகளில், 50 சதவீத கட்டண சலுகை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்திக் அளித்த பேட்டி:
சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம், கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த, விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது; ஒப்புதலுக்கா க காத்திருக்கிறோம்.
இருப்பினும், அந்த திட்டங்களுக்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன.
அந்தந்த மாவட்ட அதிகாரிகள் வாயிலாக நிலம் அளவீடு செய்வது, கையகப்படுத்துவது போன்ற பணிகள் நடந்து வருகின்றன. சென்னை கடற்கரை - வேளச்சேரி மேம்பால ரயில் சேவையை மெட்ரோவுடன் இணைக்க, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், மெட்ரோவுடன் இணைக்கப்படும்.
மேம்பால ரயில் நிலையங்களில், பயணியருக்கான வசதிகள் மேம்படுத்தப்படும். புதிய ரயில்கள், நவீன சிக்னல் தொழில்நுட்பங்கள் செயல் படுத்தப்படும்.
மேம்பால ரயில் சேவையில் கட்டண நிர்ணயம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
நடவடிக்கை சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோவில், போரூர் - பூந்தமல்லி இடையே, வரும் டிசம்பரில் மெட்ரோ ரயில் சேவை துவக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊபர் நிறுவனத்தின் மூத்த இயக்குநர் மணிகண்டன் கூறியதாவது:
'ஊபர்' செயலி வாயிலாக, சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெட்ரோவை போல, இதர பொது போக்குவரத்து வசதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆட்டோ, கார் போன்ற இணைப்பு வாகனங்களில், மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு சென்று, அங்கிருந்து மற்றொரு இணைப்பு வாகனத்தில் அலுவலகத்துக்கு செல்ல வசதி ஏற்படுத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் மனோஜ் கோயல், தலைமை ஆலோசகர் மால்யா, ஆலோசகர் மனோகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

