ADDED : செப் 29, 2011 08:39 PM
மதுரை: நெல்லையில் நடந்த நில அபகரிப்பு வழக்கில் கைதான தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., கருப்பசாமி பாண்டியனுக்கு, மதுரை ஐகோர்ட் கிளை நிபந்தனை ஜாமின் வழங்கியது.
நெல்லையைச் சேர்ந்தவர் அசோக்பாண்டியன். இவரது நிலத்தை அபகரிக்க முயன்றதாக, கருப்பசாமி பாண்டியன், சாமுவேல் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில், கருப்பசாமி பாண்டியன் கைது செய்யப்பட்டு, பாளை சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமின் கோரி அவரது சார்பில் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஆர்.மாலா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஆனந்த் ஆஜரானார். கருப்பசாமி பாண்டியனுக்கு ஜாமின் வழங்க, அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. எனினும், அவருக்கு ஜாமின் வழங்கிய நீதிபதி, மறுஉத்தரவு வெளியிடும் வரை தினமும் நெல்லை முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவர் கையெழுத்திடவும் நிபந்தனை விதித்தார்.