ADDED : செப் 08, 2011 12:01 AM
பொங்கலூர்: நில மோசடி மற்றும் கொலை மிரட்டல் வழக்கில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் பழனிசாமி மகன் பைந்தமிழ் பாரி நேற்று கைது செய்யப்பட்டார். திருப்பூர் முருங்கப்பாளையம் தெற்கு திரு.வி.க., நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ், 36; விவசாயி. இவருக்கு சொந்தமான, பொங்கலூர் வேலம்பட்டியில் உள்ள 15.16 ஏக்கர் நிலத்தை, 2008, ஏப்., 15ல், தி.மு.க., முன்னாள் அமைச்சர் பழனிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., மணி ஆகியோர், மணியின் மகன் வெங்கடேஸ்வரன் பெயருக்கு, ஒரு கோடியே 74 லட்சம் ரூபாய்க்கு கிரைய ஒப்பந்தம் செய்துள்ளனர். ஐந்து லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து, மீதித்தொகையை பின்னர் தருவதாக கூறியுள்ளனர். மீதமுள்ள பணத்துக்கு மூன்று காசோலை கொடுத்துள்ளனர். அவற்றை வெங்கடேஷ், வங்கியில் செலுத்தியபோது, பணம் இல்லாமல் திரும்பி வந்தன.
இதுபற்றி வெங்கடேஷ், முன்னாள் எம்.எல்.ஏ., மணி மற்றும் முன்னாள் அமைச்சர் பழனிசாமியிடம் கேட்ட போது, பணத்தை தராமல் இழுத்தடித்துவிட்டு, கொடுக்க முடியாது என்று கொலை மிரட்டல் விடுத்ததாக, கடந்த 2010ல் அவினாசிபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இதுசம்பந்தமாக போலீசார் நடவடிக்கை எடுக்காததால், எஸ்.பி., பாலகிருஷ்ணனிடம் புகார் கொடுத்தார். அதன்பின், முன்னாள் எம்.எல்.ஏ., மணி, அவரது மகன் வெங்கடேஸ்வரன், முன்னாள் அமைச்சர் பழனிசாமி, அவர் மகன் பைந்தமிழ் பாரி, குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பாலன், பூபதி ஆகியோர் மீது கொலை மிரட்டல், நிலத்துக்குள் அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். எஸ்.பி., உத்தரவுப்படி, பல்லடம் டி.எஸ்.பி., முருகானந்தம் தலைமையிலான போலீசாரால், முன்னாள் எம்.எம்.ஏ., மணி கடந்த மாதம் 17ம் தேதி கைது செய்யப்பட்டார். மணியின் மகன் வெங்கடேஸ்வரன் முன்ஜாமின் மனு தாக்கல் செய்து தலைமறைவாக உள்ளார். முன்னாள் அமைச்சர் பழனிசாமி முன்ஜாமின் பெற்றுள்ளார். பாலன், பூபதி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். முன்னாள் அமைச்சர் பழனிசாமியின் மகனும், கோவை மாநகராட்சி தெற்கு மண்டல தலைவருமான பைந்தமிழ் பாரி, நேற்று, கோவை கிராஸ்கட் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில், உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனுக்களை, கட்சியினரிடம் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது, பல்லடம் போலீசார் கைது செய்து, அவினாசிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதன் பின், பல்லடம் மாஜிஸ்திரேட் பத்மா வீட்டுக்கு அழைத்துச் சென்று ஆஜர்படுத்தினர். சேலம் மத்திய சிறையில், பைந்தமிழ் பாரியை அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். முன்ஜாமின் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் பழனிச்சாமி தினமும் அவினாசிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட வேண்டும். ஆனால், ஸ்டேஷனுக்கு வந்தால் மீண்டும் ஏதாவது ஒரு வழக்கில் கைது செய்யப்படுவோம் என்ற பயத்தில், ஸ்டேஷன் பக்கம் வருவதை தவிர்த்து வருகிறார்.