அகமலை மலைப்பாதையில் பல இடங்களில் மண் சரிவு; போக்குவரத்து, மின்சாரம் துண்டிப்பு
அகமலை மலைப்பாதையில் பல இடங்களில் மண் சரிவு; போக்குவரத்து, மின்சாரம் துண்டிப்பு
ADDED : நவ 05, 2024 12:08 AM

போடி: தேனி மாவட்டத்தில் பெய்யும் கன மழையால் போடி அருகே கண்ணக்கரை -- அகமலை செல்லும் மலைப் பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு 15 க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களுக்கு போக்குவரத்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், போடி ஒன்றியத்திற்கு உட்பட்டது அகமலை ஊராட்சி. இப்பகுதியில் கண்ணக்கரை, அகமலை, அண்ணாநகர், சொக்கன் அலை, பனங்கோடை, ஊரடி, ஊத்துக்காடு, குண்டேரி, கானகமிஞ்சி, மருதையனூர், பட்டூர் உள்ளிட்ட பல மலை கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் 4 ஆயிரம் ஏக்கரில் ஏலம், காப்பி, பலா, எலுமிச்சை, ஆரஞ்சு பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளன.
தொடர் மழையால் பெரியகுளத்தில் இருந்து கண்ணைக்கரை வழியாக அகமலை செல்லும் ரோட்டில் கணேசன் தோட்டம், லீலாவதி பெண்ட் உட்பட 10 க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. மரங்கள் வேரோடு சாய்ந்தும், பாறைகள் உருண்டு ரோட்டிலும் விழுந்துள்ளன.
நடந்துகூட செல்ல முடியாத நிலை உள்ளது. 15க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களுக்கு போக்குவரத்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டு கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மரங்கள் பாறை கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து சீராக இன்னும் 4 நாட்கள் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.