ADDED : ஜன 02, 2026 03:01 PM

ஊட்டி: கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டதால், ஊட்டி - குன்னூர் மலை ரயில் ரத்து செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நீடித்தது. நேற்று இரவு முதல் விடாமல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. குன்னூரில் 21.5 செ.மீ. மழை அளவு பதிவானது.
நள்ளிரவில், மேட்டுப்பாளையம் பாதையில் மண் சரிவில், டிப்பர் லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மலை ரயில் பாதையில் வெலிங்டன் மற்றும் ஹில் குரோவ் உட்பட சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு தண்டவாளம் முழுவதும் மூடியது. இதனால் ஊட்டி - குன்னூர் மலை ரயில் ரத்து செய்யப்பட்டது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து 210 சுற்றுலா பயணிகளுடன் வந்த மலை ரயில் மீண்டும் திரும்பி சென்றது. சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மலை ரயில் பாதையில் ரயில்வே பொதுப்பணி துறை ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குன்னூர் உழவர் சந்தை பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு கார்கள் சேதமானது. இந்த பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்கள் பாதிக்கப்பட்டனர். சீரமைப்பு பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
மண்சரிவில் மின் கம்பங்களும் சரிந்தால் குன்னூரில் மின் தடை ஏற்பட்டுள்ளது. கொட்டும் மழையில் மின் ஊழியர்கள் சீரமைப்பில் ஈடுபட்டுள்ளனர். ஊட்டி - குன்னூர் சாலையில் மண்சரிவால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பயணிகள் சிரமப்பட்டனர்.

