தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: பிரேமலதா
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: பிரேமலதா
ADDED : ஆக 06, 2025 02:40 AM

திருத்தணி:“தமிழகத்தில், ஆணவ கொலைகள், கஞ்சா கடத்தல், பெண்களுக்கு எதிரான வன்முறை என, சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது,” என, தே.மு.தி.க., பொது செயலர் பிரேமலதா திருத்தணியில் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சட்டசபை தொகுதியில், 'உள்ளம் தேடி; இல்லம் நாடி' யாத்திரை மற்றும் நடைபயணத்தை தே.மு.தி.க., பொது செயலர் பிரேமலதா துவக்கியுள்ளார்.
நேற்று காலை, மாநில பொருளாளர் சுதீஷ், இளைஞர் அணி அமைப்பாளர் விஜயபிரபாகரன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன், திருத்தணி மலைக் கோவிலுக்கு சென்று வழிபட்டார்.
பின், அவர் கூறியதாவது:
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. ஆணவ படுகொலைகள், கஞ்சா, குட்கா, மதுபாட்டில் கடத்தல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், இந்த நான்கு ஆண்டுகளில் அதிகரித்துள்ளன.
கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை, 'உள்ளம் தேடி; இல்லம் நாடி' யாத்திரையை முடித்து, வரும் ஜனவரி மாதத்தில் கடலுாரில் நடைபெறும் மாநாட்டில், தே.மு.தி.க.,வின் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

