ADDED : ஆக 04, 2025 06:14 AM
அவனியாபுரம்: ''தமிழகத்தில் தொடர்ந்து கொலை, கொள்ளை நடப்பதால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை,'' என, மதுரையில் த.மா.கா., தலைவர் வாசன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் தொடர்ந்து 2 மாதங்களுக்குள் திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார், திருநெல்வேலி கவின் ஆணவக்கொலை போன்றவை நடந்து மக்களுக்கு கொடுத்துள்ளது.
இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
தொடர்ந்து கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமை நடக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாததாக அரசு செயல்படுவது, அதன் செயலற்ற திறனை எடுத்துக்காட்டுகிறது. போதை பொருட்கள் விற்பதை நிறுத்தும் சக்தி இந்த அரசுக்கு இல்லை. சட்டம் ஒழுங்கு சீர் கெட்டதற்கு டாஸ்மாக் ஆதிக்கமும் காரணம்.
டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடும் நிலையை இந்த அரசு எடுக்க வேண்டும். மக்கள் பிரச்னைகளை பேசுவதற்காக தமிழகத்தில் இருந்து அனைத்து உறுப்பினர்களையும் ஆளுங்கட்சிக்கு மக்கள் கொடுத்தனர். ஆனால் உறுப்பினர்களின் செயல்பாட்டில் மக்கள் ஏமாற்றமடைந்து இருக்கின்றனர்.
லோக்சபா குறித்து கவலைப்படாத உறுப்பினர்கள், அதனை நடத்த விடாமல் முடக்குவது ஏற்புடையது அல்ல. பீகாரிலும், தமிழகத்திலும் வாக்காளர்கள் பிரச்னையை கிளப்ப நினைப்பது சரியானது அல்ல. மக்கள் அதை ஏற்க தயாராக இல்லை என்றார்.