படிப்பை முடித்தும் பட்டம் கிடைக்காமல் அல்லாடும் சட்டப்பள்ளி மாணவர்கள்
படிப்பை முடித்தும் பட்டம் கிடைக்காமல் அல்லாடும் சட்டப்பள்ளி மாணவர்கள்
ADDED : ஜன 22, 2025 12:37 AM
சென்னை:தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப்பல்கலையின் கீழ் செயல்படும் சீர்மிகு சட்டப்பள்ளியில், 2021, 2022ல் இளங்கலை சட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு, ஐந்து ஆண்டுகளாக பட்டச்சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து, மாணவர்கள் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும், பட்டமளிப்பு விழா நடத்த மாணவர்களிடம், 3,000 ரூபாயை பல்கலை நிர்வாகம் பெறுகிறது. பட்டமளிப்பு நாளில், தங்கப்பதக்கம் வென்ற மாணவர்களுக்கு மட்டும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
மற்றவர்களுக்கு, கல்லுாரி சார்பில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. கடந்த, 2020க்கு பின், கொரோனா தொற்று பரவியதால் பட்டச்சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
நிலைமை சரியான பிறகும், இதுவரை சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை. 'புரவிஷனல் சர்ட்டிபிகேட்' என்ற தற்காலிக பட்டச்சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டது. அதை ஓராண்டுக்கு மேல் பயன்படுத்த முடியாது. வேலைவாய்ப்பு, உயர்கல்வி உள்ளிட்டவற்றில் சிக்கல்களை எதிர்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அம்பேத்கர் சட்டப்பல்கலை துணைவேந்தர் சுந்தோஷ்குமார் கூறியதாவது:
கடந்த, 2023ம் ஆண்டு, பட்டமளிப்பு விழா நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த மாதம், 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளுக்கான பட்டமளிப்பு விழாவை நடத்தி முடித்தோம்.
மேடையில் சான்றிதழ்கள் பெற்றவர்கள் தவிர, மற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் இன்னும் தயாராகவில்லை. இரண்டு மாதங்களுக்குள் அனைத்து மாணவர்களுக்குமான சான்றிதழ்கள், அவர்கள் படித்த கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பப்படும்.
மாணவர்களும், நிறுவனங்களும் அதிகரித்த நிலையில், பல்கலையில் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாதவாறும், அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் வாங்க, பல்கலையில் போதிய நிதி இல்லாததாலும், இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது.
பழைய சான்றிதழ்கள் கிடைக்காதது குறித்து, அந்தந்த கல்வி நிறுவனங்களில் விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.