மரம் ஏறும் தொழிலாளி கொலை: வக்கீல், மனைவி குடும்பம் கைது
மரம் ஏறும் தொழிலாளி கொலை: வக்கீல், மனைவி குடும்பம் கைது
ADDED : மார் 18, 2024 01:33 AM

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், உத்தமபாளையம் தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்தவர் கணேசன், 46. இவரது மனைவி தீபா. இரு குழந்தைகள் உள்ளனர். ஆறு மாதங்களுக்கு முன் தீபா குழந்தைகளுடன் சென்னை சென்றார்.
கணேசன் உத்தமபாளையத்தில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் காலை உ.அம்மாபட்டி ரோடு தாலுகா அலுவலகம் அருகே கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்ட அடையாளங்களுடன் கணேசன் இறந்து கிடந்தார்.
அப்பகுதி கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். உ.அம்மாபட்டி பைபாஸ் ரோட்டில், நள்ளிரவில் டூ - வீலர் ஒன்றில் மூன்று பேர் அமர்ந்து செல்வது பதிவாகியிருந்தது.
கூர்ந்து ஆய்வு செய்த போது கணேசன் நடுவில் அமர வைக்கப்பட்டு, பின்புறம் வக்கீல் சுரேஷ் அமர்ந்தும், டூ - வீலரை சுரேஷ் மாமனார் முருகன் ஓட்டிச் செல்வதும் தெரிந்தது.
சுரேஷ், அவரது மனைவி ஜமுனா, மாமனார் முருகன், மாமியார் முருகேஸ்வரியை போலீசார் கைது செய்தனர்.
விசாரித்ததில், ஜமுனா வுடன் கணேசன் கள்ளத்தொடர்பில் இருந்ததும், அதனால், சுரேஷ் உள்ளிட்ட நான்கு பேரும் சேர்ந்து கணேசனை கொலை செய்தததும் தெரிந்தது.

