ADDED : டிச 13, 2024 01:16 AM
சென்னை:கோவையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கல்லுாரி மாணவிக்கு, சட்ட உதவி செய்வதாக கூறி ஏமாற்றிய வழக்கறிஞரை, 'சஸ்பெண்ட்' செய்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
கோவையை சேர்ந்த, 23 வயது கல்லுாரி மாணவி, கோவையில் தங்கியிருந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் கே.மனோஜ்பாண்டியிடம், தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைக்கு சட்ட உதவி கோரி உள்ளார்.
அவரும் உதவி செய்வதாகக் கூறி, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவருடன் சேர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். இதுபற்றி பாதிக்கப்பட்ட மாணவி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் புகார் அளித்தார்.
புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். வழக்கை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
கடந்த விசாரணையில், சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மீது பார் கவுன்சில் எடுத்த நடவடிக்கை குறித்து பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இதையடுத்து, வழக்கறிஞர் கே.மனோஜ்பாண்டியை, இடைக்காலமாக, 'சஸ்பெண்ட்' செய்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
ஒழுங்கு நடவடிக்கை குழுவின் விசாரணை முடியும் வரை, வழக்கறிஞர் தொழில் செய்ய இடைக்காலமாக சஸ்பெண்ட் செய்துள்ளதாக தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், கல்லுாரி மாணவி வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
மாணவி சார்பில் வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் ஆஜராகி, ''புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத, காவல் துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் இரு பெண்கள் இடம் பெற வேண்டும்,'' எனக்கூறி, அதற்கான மனுவை தாக்கல் செய்தார்.
அதை ஏற்ற நீதிபதிகள், கோவை நகர காவல் துறை கமிஷனர், கோவை தெற்கு துணை கமிஷனர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி, 6க்கு தள்ளிவைத்தனர்.
முன்னதாக, சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை சஸ்பெண்ட் செய்துள்ளதாக பார் கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.