ADDED : டிச 12, 2025 10:29 AM

சென்னை: உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்க கோரும் தீர்மான நோட்டீசை ரத்து செய்ய கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை மீது, தீபத்துாணில் தீபம் ஏற்ற, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார்.
இதை அரசியலாக்க முயற்சிகள் நடப்பதாகவும், அதை கண்டிக்கும் விதமாகவும், நேர் சிந்தனை வழக்கறிஞர்கள் சங்கத்தினர், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பங்கேற்றவர்கள் பேசுகையில், 'நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை அரசியலாக்கி, மத அரசியலுக்கு, தி.மு.க., வித்திடுகிறது.
'நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை, பதவி நீக்கம் செய்யும், தீர்மான நோட்டீசை, திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், மாநிலம் முழுதும், தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்' என்றனர்.

