ADDED : டிச 12, 2025 10:19 AM

சென்னை: தமிழக அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹுவுக்கு, ஐ.நா., அமைப்பு விருது வழங்கியுள்ள தற்கு, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
ஐ.நா.,வின் சுற்றுச்சூழல் திட்டமான, யு.என்.இ.பி.,யின் ஏழாவது மாநாடு, ஆப்ரிக்க நாடான கென்யாவின் நைரோபி நகரில் நடந்து வருகிறது. இதில், சுப்ரியா சாஹு பங்கேற்றுஉள்ளார்.
உலகம் முழுதும் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு, இந்த மாநாட்டில், 'சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்' என்ற பெயரில் விருது வழங்கப்படுகிறது.
இதில், தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரியான சுப்ரியா சாஹு, சதுப்பு நில பாதுகாப்பு, அலையாத்தி காடுகள் வளர்ப்பு, அரிய வகை விலங்குகள் பாதுகாப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக, இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். நைரோபியில் நடந்த நிகழ்ச்சியில், அவருக்கு விருது வழங்கப்பட்டது.
இதையடுத்து, சுப்ரியா சாஹுவுக்கு, முதல்வர் ஸ்டாலின் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துஉள்ளார்.

