ADDED : டிச 12, 2025 10:18 AM

சென்னை: சுய வேலைவாய்ப்பு திட்டத்தில், கடன் கேட்டு விண்ணப்பம் செய்வோரின் விண்ணப்பங்களை, இரு வாரங்களுக்குள் பரிசீலித்து ஒப்புதல் அளிக்குமாறு, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரிகளை, அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் கீழ் இயங்கும் தொழில் வணிக ஆணையரகம், பல்வேறு சுய வேலைவாய்ப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, முதல் தலைமுறையினர் தொழில் முனைவோராக, உற்பத்தி, சேவை சார்ந்த தொழில் துவங்க கடனுதவி வழங்கப்படுகிறது. இதில் அதிகபட்சம், 75 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.
இந்த நிதியாண்டில், கைவினை திட்டத்தில் இதுவரை, 27,010 பேர் விண்ணப்பித்த நிலையில், 13,350 பேருக்கு கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
புதிய தொழில் முனைவோர் திட்டத்தில், 2,171 விண்ணப்பித்த நிலையில், 730 பேருக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் திட்டத்தில், 6,941 பேர் விண்ணப்பம் செய்த நிலையில், 1,558 பேருக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மூன்று திட்டங்களிலும் மீதமுள்ள விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.

