'பிரிந்து சென்ற தலைவர்களை கட்சியில் சேர்க்க வேண்டும்' அ.தி.மு.க., ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்
'பிரிந்து சென்ற தலைவர்களை கட்சியில் சேர்க்க வேண்டும்' அ.தி.மு.க., ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்
ADDED : நவ 20, 2024 05:34 AM

சிவகங்கை : சிவகங்கையில் நடந்த அ.தி.மு.க., ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.ம.மு.க., தலைவர் தினகரனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பேசப்பட்டது. தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என முன்னாள் எம்.எல்.ஏ., உமாதேவன் கேள்வி எழுப்பியதால், வாக்குவாதம் ஏற்பட்டது.
சிவகங்கையில் அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது. முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் மாநில எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலர் கருணாகரன் பேசுகையில், “தென் மாவட்டங்களில் தி.மு.க., அசுர பலத்துடன் இருக்கிறது. அதற்கேற்ப நாம் தயாராக வேண்டும்.
''முக்குலத்தோர் சமுதாய தலைவர்கள் அரவணைத்து செல்ல வேண்டும். முக்குலத்தோர் சமுதாயத்தை ஈர்க்கக்கூடிய தலைவர்களை, அ.தி.மு.க.,வில் உருவாக்க வேண்டும்,” என்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் பேசுகையில், “முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கும், தினகரனுக்கும் ஆதரவாக சிலர் பேசுகின்றனர். அவர்கள் இருவர் மட்டும் தான் கட்சிக்காக உழைத்தனரா; அவர்களுக்கு இனிமேல் கட்சியில் இடம் கொடுக்கக்கூடாது,” என்றார்.
செந்தில்நாதன் எம்.எல்.ஏ., பேசுகையில், “அ.தி.மு.க., என்ற கட்சியை அனைத்து சமுதாய மக்களுக்காகவும் தான் எம்.ஜி.ஆர்., உருவாக்கினார். அதை தான் பழனிசாமியும் கடைப்பிடித்து வருகிறார். நம்மிடம் இருந்து பிரிந்து சென்ற தலைவர்கள் மற்றும் தொண்டர்களை சேர்க்க முயற்சி செய்வோம்,” என்றார்.
மாநில எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலர் உமாதேவன் பேசுகையில், “எம்.ஜி.ஆரின் மீதான விசுவாசத்தால் இந்த இயக்கத்திற்கு வந்தவன். கடந்த 2001ல், சிலரின் காலில் விழுந்திருந்தால் நான் அமைச்சராகி இருக்கலாம். இந்த கூட்டம் நடப்பது குறித்து எனக்கு தெரியாது,” என்று பேசினார்.
குறுக்கிட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலர் பிரபு, உமாதேவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் திடீர் சலசலப்பு ஏற்பட்டது.
இறுதியில் மாவட்டச் செயலர் செந்தில்நாதன் பேசுகையில், “உமாதேவனை, இரண்டு முறை போனில் அழைத்தேன். போன், 'நாட் ரீச்சபிள்' என வந்தது. உடனே அவருடைய மகனுக்கு போன் செய்து கூட்டத்திற்கு வருமாறு தகவல் சொன்னேன்,” என்று கூறி, தன் மொபைல் போனை காண்பித்தார்.
அதன்பின், கூட்டத்தில் அமைதி ஏற்பட்டது.

