UPDATED : டிச 12, 2024 12:14 PM
ADDED : டிச 12, 2024 09:52 AM

சென்னை: '6ல் இருந்து 60 வரை அனைவரையும் தனது நடிப்பு ஸ்டைலால் ரசிகர்களாக்கிக் கொண்டவர் ரஜினி' என முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: எல்லைகள் கடந்து ஆறிலிருந்து அறுபதுவரை அனைவரையும் தன்னுடைய நடிப்பால் - ஸ்டைலால் ரசிகர்களாக்கிக் கொண்ட அருமை நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினி காந்துக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள், எப்போதும் அமைதியோடும் மனமகிழ்ச்சியோடும் திகழ்ந்து மக்களை மகிழ்வித்திட விழைகிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
கமல் வாழ்த்து
'அன்பு நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். மென்மேலும் பல வெற்றிகள் பெறுக; நலம் சூழ்க; மகிழ்ச்சி நிறைக; நீடு வாழ்க' என நடிகர் கமல் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இ.பி.எஸ்., வாழ்த்து
தன் தனித்துவமான நடிப்பாற்றலால் உலகளாவிய ரசிகர் பட்டாளம் கொண்டவரும், என்றும் பழகுவதற்கு இனியவருமான அன்பு நண்பர் ரஜினிக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். திரையுலக வாழ்வில் பொன்விழா ஆண்டில் உள்ள அன்பு நண்பர் ரஜினிகாந்த் இன்னும் பல்லாண்டு பூரண உடல் நலத்துடன் ரசிகர்களை மென்மேலும் மகிழ்விக்க வாழ்த்துகிறேன்.
விஜய் வாழ்த்து
தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடுழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன். பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
பா.ம.க., தலைவர் அன்புமணி
நடிகர் நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் இன்று 75ம் பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன் 100 ஆண்டுகள் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
தமிழக பா.ஜ.,தலைவர் அண்ணாமலை
எளிய பின்னணியில் இருந்து வந்து, தனது கடும் உழைப்பாலும், மேன்மையான பண்புகளாலும், இந்தியத் திரையுலகின் அடையாளங்களில் ஒருவராக உயர்ந்திருக்கும், அன்புக்கும் மரியாதைக்கும் உரிய, சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, மூன்று தலைமுறைகளை, தனது வசீகரத்தால் கட்டிப் போட்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேலும் பல்லாண்டுகள் நலமுடன் ஆரோக்கியத்துடன் வாழ, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

