காற்றாலைகளில் அதிக முதலீடு ஈட்ட குத்தகை நிலம், மின் வழித்தட இணைப்பு தேவை
காற்றாலைகளில் அதிக முதலீடு ஈட்ட குத்தகை நிலம், மின் வழித்தட இணைப்பு தேவை
ADDED : அக் 17, 2025 07:51 PM
சென்னை: ''அரசே நிலத்தை குத்தகைக்கு வழங்குவதுடன், காற்றாலை மின் நிலையத்தை, மின் வழித்தடங்களில் இணைக்க விரைவாக அனுமதி அளித்தால், தமிழகத்தில் காற்றாலை மின் திட்டங்களில் அதிக முதலீடு வரும்,'' என, இந்திய காற்றாலை மின் சாதன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் துணை தலைவர் சரவணன் மாணிக்கம் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
காற்றாலை மின் துறையினர் பங்கேற்கும், 'விண்டெர்ஜி 2025' சர்வதேச கண்காட்சி மாநாடு, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும், 29 முதல், 31ம் தேதி வரை நடக்கிறது.
விலை குறையும் இதில், 300 அரங்குகள், 20 நாடுகளின் பங்கேற்பாளர் உட்பட, 15,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.
காற்றாலை மின் சாதனங்களுக்கான ஜி.எஸ்.டி., 18 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதனால், காற்றாலை மின் திட்டங்களுக்கு செலவு குறைந்துள்ளதால், அதிக முதலீடுகள் வரும். காற்றாலை மின்சாரம் கொள்முதல் விலையும் குறையும்.
வரும், 2030க்குள் நாடு முழுதும், ஒரு லட்சம் மெகாவாட் திறனில், காற்றாலை மின் நிலையங்கள் அமைக்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுவரை, 53,000 மெகா வாட் வந்துள்ளது.
தற்போது, 120 மீட்டர் உயரத்தில், ஏ.ஐ., செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் செயல்படும், நவீன காற்றாலை மின் நிலையங்கள் வந்து விட்டன.
தமிழகத்தில் உள்ள, 12,000 மெகா வாட் காற்றாலை மின் நிலையங்களில், 7,000 மெகா வாட் பல ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டவை அவை, குறைந்த திறன் உடையவை. குஜராத்தில் அரசின் சார்பில் காற்றாலை மின் நிலையம் அமைக்க நிலம் குத்தகைக்கு வழங்கப்படுகிறது.
அனுமதி தமிழகத்திலும் அரசின் சார்பில் காற்றாலை அமைக்க குத்தகைக்கு நிலம் வழங்குவதுடன், காற்றாலை மின் சாதனங்களை சாலை, கிராமம் வழியே எடுத்து செல்வதற்கான அனுமதிகளை விரைவாக வழங்க வேண்டும்.
மின் நிலையம் அமைத்த பின், மின் வழித்தடத்துடன் இணைக்கும் அனுமதியை விரைவாக வழங்க வேண்டும். இதன் வாயிலாக, தமிழகத்தில் காற்றாலை மின் திட்டங்களில் அதிக முதலீடுகளை ஈர்க்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.