வினாத்தாள் வெளியாகும் அபாயம் விரிவுரையாளர்கள் கடும் கவலை
வினாத்தாள் வெளியாகும் அபாயம் விரிவுரையாளர்கள் கடும் கவலை
ADDED : நவ 09, 2025 02:10 AM
சென்னை: 'டிப்ளமோ செமஸ்டர் தேர்வு வினாத்தாள்களை நகலெடுத்து மாணவர்களுக்கு வழங்குவதால், தேர்வுக்கு முன்பே வினாத்தாள் வெளியாகும் சூழல் உருவாகி உள்ளது' என, விரிவுரையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அனைத்துவகை பாலிடெக்னிக் கல்லுாரிகளிலும், டிப்ளமோ செமஸ்டர் தேர்வுகள் துவங்கி உள்ளன.
கடந்த ஆண்டுகளில், டிப்ளமோ செமஸ்டர் தேர்வுக்கான வினாத்தாள்கள், தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் இருந்து, நேரடியாக கல்லுாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு, 'சீல்' பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தேர்வறைக்கும் வினாத்தாள் வழங்கப்படும்.
ஆனால், நடப்பாண்டு முதல், வினாத்தாள் வினியோகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், டிஜிட்டல் முறையை கையாண்டுள்ளது. அதாவது, கல்லுாரிகளுக்கு 'ஆன்லைன்' வழியே வினாத்தாள்கள் அனுப்பப்பட்டு, அவற்றை கல்லுாரிகளே நகல் எடுத்து, செமஸ்டர் தேர்வுக்கு பயன்படுத்தி வருகின்றன.
இதனால், தேர்வு துவங்க தாமதமாவதுடன், முன்கூட்டியே வினாத்தாள் வெளியாக வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து, விரிவுரையாளர்கள் கூறியதாவது:
டிப்ளமோ செமஸ்டர் தேர்வு துவங்கி உள்ளது. தேர்வுக்கான வினாத்தாள்கள், கல்லுாரிகளுக்கு ஆன்லைனில் அனுப்பப்பட்டு, நகல் எடுக்கப்படுகின்றன.
ஒரே நேரத்தில், எவ்வளவு நகல்களை கல்லுாரிகளால் எடுக்க முடியும். இதில் ஏற்படும் தாமதம், தேர்வு துவங்குவதில் எதிரொலிக்கிறது. மாணவ - மாணவியருக்கு வழங்கப்படும் வினாத்தாள்கள் அனைத்தும நகல் என்பதால், அவை முன்கூட்டியே வெளியாகும் ஆபத்து உள்ளது.
ஒரு கல்லுாரியில் 10:30 மணிக்கும், மற்றொரு கல்லுாரியில் 11:00 மணிக்கும் தேர்வு துவங்கினால், வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகும் சூழல் ஏற்படும்.
இதுபோன்ற ஆபத்தான சூழல் ஏற்படாமல் இருக்க, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

