ஜெயலலிதா உடைமைகளை அரசிடம் ஒப்படைக்க கோரி சட்ட ஆர்வலர் கடிதம்
ஜெயலலிதா உடைமைகளை அரசிடம் ஒப்படைக்க கோரி சட்ட ஆர்வலர் கடிதம்
ADDED : ஜன 24, 2025 11:37 PM
பெங்களூரு:முன்னாள் செயலர் பாஸ்கரனிடம் இருக்கும், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடைமைகளை மீட்டு, தமிழக அரசிடம் ஒப்படைக்கும்படி, தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு, தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் நரசிம்மமூர்த்தி கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், 1996 டிசம்பர் 7 முதல் 12ம் தேதி வரை போயஸ் கார்டன் வீட்டில், தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது.
அப்போது தங்கம், வெள்ளி, வைர நகைகள் அடங்கிய ஆறு டிரங்க் பெட்டிகள், 1,562 ஏக்கர் நில ஆவணங்கள், 27 பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
ஜெயலலிதா வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டதால், வழக்கில் கைப்பற்றப்பட்ட பொருட்களை பெங்களூருக்கு எடுத்து வரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது, ஆறு டிரங்க் பெட்டிகள், நில ஆவணங்கள் மட்டும் பெங்களூரில் உள்ளன.
வழக்கில் கைப்பற்றப்பட்ட பிற 27 உடைமைகளை ஜெயலலிதாவின் முன்னாள் செயலர் பாஸ்கரனிடம் ஒப்படைத்து விட்டதாக, தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிந்து கொண்டேன்.
பாஸ்கரனிடம் உள்ள 27 உடைமைகளின் மதிப்பும் பல கோடி ரூபாய் இருக்கும். அந்த உடைமைகளை மீட்டு தமிழக அரசிடம் ஒப்படைக்க, நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.