திருப்பத்தூர் தனியார் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை: மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டம்
திருப்பத்தூர் தனியார் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை: மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டம்
UPDATED : ஜூன் 14, 2024 09:47 PM
ADDED : ஜூன் 14, 2024 06:06 PM

திருப்பத்தூர் : திருப்பத்தூரில் தனியார் பள்ளிக்குள் சிறுத்தை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் முயன்று வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் பின்புறம் மேரி இம்மாகுலேட் என்ற தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்குகிறது. பள்ளியில் இன்று( ஜூன் 14) மாலை, 4:30 மணியளவில் பெயின்ட் அடிக்கும் பணியில் திருப்பத்தூரை சேர்ந்த கோபால், 55, என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு பதுங்கியபடி நின்ற சிறுத்தையை பார்த்து அதிர்ச்சியடைந்தார். சுதாரிப்பதற்குள் பாய்ந்த சிறுத்தை நகத்தால் கோபாலின் மண்டையில் தாக்கி தப்பியது. பள்ளி வளாகத்தையொட்டியுள்ள சாமன் நகர் குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை, அங்கு வசிக்கும் சப்கலெக்டர் ஜெயராமன் என்பவரது வீட்டின் அருகே பழைய ஷெட்டுக்குள் புகுந்தது.
ப டுகாயமடைந்த கோபால், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்து திருப்பத்தூர் கலெக்டர் தர்ப்பகராஜ், மாவட்ட எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் ஆகியோர் விரைந்து வந்தனர். மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் தலைமையில் மூன்று குழுக்களாக பிரிந்த வனத்துறையினர், பள்ளி மாணவியரை பத்திரமாக அவர்களது வீடுகளுக்கு அனுப்பினர். மேலும் அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் என ஒலிப்பெருக்கியில் எச்சரித்தனர். அதேபகுதியில் மேலும் சில பள்ளிகள் இருப்பதால் முதலில் பள்ளி மாணவர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்றவுடன் ஷெட்டில் பதுங்கியுள்ள சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதா அல்லது கூண்டை வைத்து பிடிப்பதா என வனத்துறையினர் யோசித்து வருகின்றனர்.
திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை: மாவட்ட கலெக்டர்
சிறுத்தை நடமாட்டத்தை தொடர்ந்து திருப்பத்தூரில் பள்ளிகள் நாளை முதல் மூன்று நாட்கள் வரையில் எந்த விதமான பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.
மாவட்ட கலெக்டர் தர்பகராஜ் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:
அரசு பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள நிலையில் தனியார் பள்ளிகளும் எந்தவிதமான பணிகளும் மேற்கொள்ளக்கூடாது,சிறுத்தை பதுங்கி உள்ள பகுதியில் யாரும் நடமாட வேண்டாம் எனவும் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
கார் பார்க்கிங் பகுதியில் பதுங்கி உள்ள சிறுத்தையை பிடிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக வனத்துறை தெரிவித்து உள்ளது. இதனிடையே சிறுத்தை பதுங்கி உள்ள கார் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டு உள்ள கார்களில் இரண்டு கார்களில் 5 பேர் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
சிறுத்தையை பிடிக்க மருத்துவ குழு
கார் பார்க்கிங் பகுதியில் பதுங்கி உள்ள சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக தர்மபுரியில் இருந்து சுகுமார் என்ற மருத்துவரும், வண்டலூரில் இருந்து ஸ்ரீதர் என்ற மருத்துவரையும் வனத்துறை சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. என வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்து உள்ளார். மேலும்சிறுத்தையை பிடிப்பதற்காக கூண்டும் கொண்டு வரப்பட்டு உள்ளது.
காருக்குள் சிக்கிய 5பேர் மீட்பு
சிறுத்தை மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர், சிறுத்தை பதுங்கி இருக்கும் கார் பார்க்கிங் பகுதியில் காருக்குள் சிக்கிய 5 பேரை மீட்பு ஏணி மூலம் பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் கார் பார்க்கிங் பகுதியில் இருந்து சிறுத்தை வெளியேறாமல் இருப்பதற்காக வன துறையினர் பார்க் சுற்றிலும் வலை கட்டி உள்ளனர்.