பள்ளிகளில் டாக்டர்கள் குறித்து பாடம்: கவர்னர் விருப்பம்
பள்ளிகளில் டாக்டர்கள் குறித்து பாடம்: கவர்னர் விருப்பம்
ADDED : ஜூலை 14, 2025 01:53 AM

சென்னை: “டாக்டர்கள் குறித்தும், சமூகத்தில் அவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும், பள்ளி பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும்,” என, கவர்னர் ரவி தெரிவித்தார்.
சர்வதேச டாக்டர்கள் தினத்தையொட்டி, கவர்னரின் 'எண்ணித் துணிக' தொடர் உரையின் 19வது கலந்துரையாடல், மருத்துவ ஆளுமைகளுடன், சென்னை ராஜ்பவனில் நேற்று நடந்தது.
இந்நிகழ்ச்சியில், சிறந்த டாக்டர்களுக்கு சான்றிதழ் வழங்கி, கவர்னர் ரவி பேசியதாவது:
தேசிய மருத்துவர் தினம் ஆண்டுதோறும் ஜூலை 1ல் கொண்டாடப்படுகிறது. உண்மையில் ஒவ்வொரு நாளும், மருத்துவர் தினமாக கொண்டாடப்பட வேண்டும். டாக்டர்கள் தங்கள் நலனை புறக்கணித்து, நோயாளிகளை காக்கின்றனர்.
மருத்துவரது உடல்நலம் மற்றும் வாழ்நாள் தனிப்பட்டவை அல்ல, சமூகத்தின் சொத்துக்களாக பார்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு டாக்டரும் தேசிய சொத்து.
அவர்களின் சேவையை உணர்ந்து, அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், பள்ளி பாடத்திட்டங்களில் டாக்டர்கள் குறித்தும், சமூகத்தில் அவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் பாடங்களை சேர்க்க வேண்டும்.
மருத்துவத் துறையில் தமிழகம், நாட்டின் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக உள்ளது. மக்கள், உலகின் பல்வேறு பகுதியில் இருந்தும் சிகிச்சைக்காக தமிழகம் வருவது பெருமைக்குரிய விஷயம். சுதந்திர இந்தியாவின் துவக்கத்தில், நாம் தவறவிட்ட பல வாய்ப்புகளை, மீண்டும் பெற வேண்டும்.
அன்று நாம் ஆறாவது பெரிய பொருளாதார சக்தியாக இருந்தோம். பின் கீழே தள்ளப்பட்டோம். இன்று நாம் நான்காவது இடத்தில் உள்ளோம். விரைவில் மூன்றாம் இடம் பிடிப்போம். இதற்கு ஆரோக்கியமான குடிமக்கள் தேவை.
இவ்வாறு, அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், நீரிழிவு நிபுணர் மோகன், பேராசிரியர் சொக்கலிங்கம், காது, தொண்டை ஆராய்ச்சி அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் மோகன் காமேஸ்வரன், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

