அன்புமணி முதலில் தன் தந்தை குறித்து பேசட்டும்: துரைமுருகன்
அன்புமணி முதலில் தன் தந்தை குறித்து பேசட்டும்: துரைமுருகன்
ADDED : ஆக 07, 2025 02:01 AM

வேலுார்: வேலுார் மாவட்டம், காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டி:
கலைஞர் பல்கலை துவங்கும் சட்ட மசோதாவுக்கு அனுமதி தர, கவர்னருக்கு விருப்பம் இல்லை. அதனால், அதற்கு ஒப்புதல் அளிக்காமல் ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளார். நடைமுறைகளை மீறி செயல்படும் கவர்னர் இப்படித்தான் இருப்பார். இது புதிதல்ல.
'பாலாற்றில் ஒரு அணையைக்கூட கட்டவில்லை' என அன்புமணி கூறுவது, தடுப்பணை குறித்து நான் வெளியிட்ட அறிக்கையை அவர் சரியாக படிக்கவில்லை என்பதே அர்த்தம்.
வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தான், அமைச்சர் துரைமுருகனை தி.மு.க., ஒதுக்குகிறது என அன்புமணி கூறி உள்ளார்.
நான் ஒதுக்கப்படுகிறேனா, இல்லையா என்பதை நான் தான் சொல்ல வேண்டும்; அன்புமணி அல்ல. அன்புமணி முதலில் அவரது தந்தை ராமதஸ் குறித்து பேசட்டும்.
அ.தி.மு.க., கொண்டு வந்த திட்டங்களுக்கு, தி.மு.க., ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறது என பழனிசாமி பேசுவது அபத்தம். அ.தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கும், கல்லுாரி மாணவர்களுக்கும், 1,000 ரூபாய் கொடுக்கவில்லை. நாங்கள் தான் கொடுக்கிறோம்.
எந்த ஒரு திட்டத்தையும், அ.தி.மு.க., ஆட்சியை பார்த்து தி.மு.க., செய்யவில்லை; அப்படியொரு அவசியமே இல்லை. தி.மு.க., பல புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
தி.மு.க., கூட்டணியில் உள்ள கம்யூ., கட்சிகள், ஆணவ படுகொலைகளை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி உள்ளன. அப்படியொரு சட்டம் கொண்டு வருவது தொடர்பாக முதல்வரிடம் பேசுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.