UPDATED : ஏப் 13, 2024 05:29 PM
ADDED : ஏப் 13, 2024 12:53 PM

நாகர்கோவில்: தமிழ் மொழியில் உங்கள் முன் பேச முடியவில்லை என வருத்தமாக உள்ளது. ஆனால், 3 ஆண்டுக்குள் இதே இடத்தில் தமிழில் பேசுவேன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
கன்னியாகுமரி தொகுதி பா.ஜ., வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் நந்தினி ஆகியோரை ஆதரித்து தக்கலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ‛ ரோடு ஷோ' நடத்தினார்.
இதில் அமித்ஷா பேசியதாவது: தமிழ் மொழி, கலாசாரம், பாரம்பரியத்தை பாதுகாக்க பிரதமர் மோடி ஓய்வின்றி உழைத்து வருகிறார். அனைவரையும் ஒருங்கிணைத்து தமிழகத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த பா.ஜ., விரும்புகிறது. ஆனால், தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் ஊழலில் ஈடுபட்டு மாநிலத்தின் வளர்ச்சியை கெடுத்து விட்டனர்.
3வது முறை மோடி பிரதமர் ஆனால், உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா 3வது இடத்தை பிடிக்கும். 400க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ., வெற்றி பெறும் என அனைவரும் பேசுகின்றனர். நாட்டை பாதுகாப்பாகவும், முன்னர் இல்லாத அளவு வளர்ச்சியடைந்ததாகவும் மோடி வைத்துள்ளார். சனாதானத்தை இழிவுபடுத்தி மக்களின் உணர்வுகளை திமுக காயப்படுத்தி விட்டது. ஆனால், பா.ஜ., அனைவரையும் மதிக்கிறது. தமிழ் மொழியில் உங்கள் முன் பேச முடியவில்லை என வருத்தமாக உள்ளது. ஆனால், 3 ஆண்டுக்குள் இதே இடத்தில் தமிழில் பேசுவேன். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

