sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வெடிக்கலாம்! * தீபாவளிக்கு இரண்டு நாட்கள் பசுமைப் பட்டாசு... * 6 ஆண்டாக இருந்த தடையை நீக்கியது சுப்ரீம் கோர்ட் * காலை ஒரு மணி நேரம், இரவில் 2 மணி நேரம் அனுமதி

/

வெடிக்கலாம்! * தீபாவளிக்கு இரண்டு நாட்கள் பசுமைப் பட்டாசு... * 6 ஆண்டாக இருந்த தடையை நீக்கியது சுப்ரீம் கோர்ட் * காலை ஒரு மணி நேரம், இரவில் 2 மணி நேரம் அனுமதி

வெடிக்கலாம்! * தீபாவளிக்கு இரண்டு நாட்கள் பசுமைப் பட்டாசு... * 6 ஆண்டாக இருந்த தடையை நீக்கியது சுப்ரீம் கோர்ட் * காலை ஒரு மணி நேரம், இரவில் 2 மணி நேரம் அனுமதி

வெடிக்கலாம்! * தீபாவளிக்கு இரண்டு நாட்கள் பசுமைப் பட்டாசு... * 6 ஆண்டாக இருந்த தடையை நீக்கியது சுப்ரீம் கோர்ட் * காலை ஒரு மணி நேரம், இரவில் 2 மணி நேரம் அனுமதி


ADDED : அக் 15, 2025 11:17 PM

Google News

ADDED : அக் 15, 2025 11:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தேசிய தலைநகர் பிராந்தியத்தில் வரும் 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை பசுமைப் பட்டாசு விற்க அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்றம், தீபாவளிக்கு முதல் நாள் மற்றும் தீபாவளி நாளில் காலையில் ஒரு மணி நேரம், இரவில் இரண்டு மணி நேரம் பசுமைப் பட்டாசு வெடிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது. தலைநகர் டில்லி, அண்டை மாநிலங்களான உத்தரப் பிரதேசம், ஹரியானா மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகள் இணைந்த என்.சி.ஆர்., எனப்படும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில், காற்று மாசைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன .

மறுபரிசீலனை அதன் ஒரு பகுதியான, பட்டாசு விற்கவும் வெடிக்கவும் 2018ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

அதேபோல, கடந்த ஆண்டு அக். 14ம் தேதி முதல் இந்த ஆண்டு ஜன. 1ம் தேதி வரை பசுமைப் பட்டாசு உட்பட அனைத்து வகையான பட்டாசும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் தயாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி பசுமைப் பட்டாசு உற்பத்தியாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவை கடந்த செப்டம்பர் 26ல் விசாரித்த உச்ச நீதிமன்றம், அனுமதி பெற்ற தயாரிப்பாளர்கள் மட்டும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் பசுமைப் பட்டாசு உற்பத்தி செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டது. ஆனால், விற்பனை செய்ய அனுமதி அளிக்கவில்லை.

இதையடுத்து, பசுமைப் பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் டில்லி அரசு சார்பில் பண்டிகை காலத்தில் மட்டும் பசுமைப் பட்டாசு விற்பனைக்கும் வெடிக்கவும் அனுமதி அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த, 10ம் தேதி விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜாரானார்.

நீதிபதிகள், 'பட்டாசு வெடிக்க தடை விதித்த 2018ல் இருந்து டில்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்று மாசு குறைந்துள்ளதா' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

காற்று மாசு அதற்கு பதிலளித்த துஷார் மேத்தா, “கொரோனா தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் மட்டுமே காற்று மாசு சற்று குறைந்தது. அதற்குப் பின், காற்று மாசு மோசமான நிலையில் தான் இருக்கிறது.

''அதேநேரத்தில், பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதை செயல்படுத்துவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. தீபாவளி போன்ற பண்டிகை காலத்தில் மட்டும் ஓரிரு நாட்களுக்கு குழந்தைகள் மகிழ்ச்சியாக பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும்,”என்றார்.

நீதிபதிகள், 'தேசிய தலைநகர் பிராந்தியத்தில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு இருப்பது சிறப்பான முடிவு இல்லை. நடுநிலையுடன் உத்தரவு பிறப்பிக்க வேண்டியது அவசியம் ஏற்பட்டுள்ளது' எனக்கூறி தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை மற்றும் வாதங்கள் ஏற்கனவே நிறைவடைந்திருந்த நிலையில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:

அக். 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் பசுமைப் பட்டாசுகளை விற்பனை செய்யலாம். தீபாவளி நாளிலும் அதற்கு முதல் நாளிலும் மட்டும் காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையிலும், இரவு 7:00 மணி முதல் 10:00 மணி வரையில் பசுமைப் பட்டாசு வெடிக்கலாம். இதர பட்டாசு வகைகளை விற்பதும், வெடிப்பதும் தண்டனைக்குரிய குற்றம். இதை, டில்லி அரசு, மாநகரப் போலீஸ், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை கண்காணிக்க வேண்டும். மேலும், 'ஆன் - லைன்' வாயிலாக பசுமைப் பட்டாசு விற்க அனுமதி இல்லை. உரிமம் பெற்ற விற்பனையாளர்கள் மட்டுமே பட்டாசு விற்பனை செய்ய வேண்டும். தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் பசுமைப் பட்டாசால் காற்றில் துகள்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் பரவுவது 30 சதவீதம் வரை குறைகிறது என அறிக்கை அளித்துள்ளதால் இந்த அனுமதி வழங்கப்படுகிறது.

பட்டாசு வெடிக்க அனுமதி அளித்துள்ள இரு நாட்களின் காற்று மாசு அளவை மாநில மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

அதேநேரத்தில், அண்டை மாநிலத்தில் தயாரிக்கப்படும் பட்டாசுகளை டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் விற்கக் கூடாது. போலீசார் கண்காணித்து அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும். மேலும், விற்பனை செய்தவரின் உரிமத்தையும் ரத்து செய்ய வேண்டும்.

மக்களின் உணர்வுக்கு மதிப்பு


டில்லி முதல்வர் ரேகா குப்தா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு: மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தீபாவளிக்கு பசுமைப் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் நடுநிலையுடன் தீர்ப்பளித்துள்ளது. அரசின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பொதுமக்களின் உணர்வுகளை மதிக்கும் டில்லி அரசு சுத்தமான காற்று மற்றும் பசுமையாக டில்லி மாநகரைப் பராமரிப்பதே டில்லி அரசின் நோக்கம். அதேநேரத்தில் பண்டிகைகளை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். அமைச்சர் கபில் மிஸ்ரா வெளியிட்டுள்ள பதிவில், “ஆறு ஆண்டுகளுக்குப் பின், டில்லி மக்கள் தீபாவளி பண்டிகையை பாரம்பரிய முறைப்படி பட்டாசு வெடித்துக் கொண்டாடுவர். உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது. மக்களின் குரலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வெற்றி கண்ட முதல்வர் ரேகா குப்தாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,”என, கூறியுள்ளார்.



கலெக்டரிடம் உரிமம்


டில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா கூறியதாவது: டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் பசுமைப் பட்டாசு விற்பனை செய்யும் இடங்களை மாவட்ட கலெக்டர்கள் தேர்வு செய்வர். விற்பனையாளர்கள் கலெக்டரிடம் விண்ணப்பித்து உரிமம் பெற வேண்டும். உரிமம் பெற்றவர்கள் பசுமைப் பட்டாசு வகைகளை மட்டுமே விற்க வேண்டும். தடை செய்யப்பட்ட பட்டாசு விற்றால் அவற்றை பறிமுதல் செய்வதுடன் உரிமம் ரத்து செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பசுமைப் பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து டில்லி மாசு கட்டுப்பாட்டு குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது. மாநகரப் போலீசாரும் அதிரடி சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பட்டாசுகளை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்தக் கண்காணிப்பு வரும் 25ம் தேதி வரை தொடரும். பசுமை பட்டாசுக வெடிக்க விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்க முயற்சி எடுத்த முதல்வர் ரேகா குப்தாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.



ஆர்வலர்கள் அச்சம்


சுற்றுச்சூழல் ஆர்வலர் அமித் குப்தா கூறுகையில், “பட்டாசு விவகாரத்தில் மக்களின் உரிமையை மதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால், காற்று மாசுபாட்டை ஆண்டு முழுதும் எதிர்கொள்ளும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் இந்த ஆண்டு மேலும் அதிகரிக்கும். காற்று தர மேலாண்மை ஆணையம், 35 சதவீத பணியாளர் பற்றாக்குறையுடன் செயல்படுகிறது. மாசுபாட்டுக்கு எதிரான நடவடிக்கைகள் பலவீனமாகத்தான் இருக்கிறது,” என்றார்.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் கூடுதல் இயக்குனரும், விமான ஆய்வக தலைவருமான தீபங்கர் சஹா கூறியதாவது: உச்ச நீதிமன்றம் பகுத்தறிவுடன் தீர்ப்பளித்துள்ளது. பண்டிகை கொண்டாட்டத்துக்கு பசுமைப் பட்டாசு சிறந்த மாற்றாக இருக்கும். ஆனாலும், சான்றளிக்கப்பட்ட பசுமைப் பட்டாசுகள் மட்டுமே விற்கப்படுவதை உறுதி செய்ய அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பொதுமக்களும் விழிப்புணர்வுடன் அவற்றை மட்டுமே வாங்க வேண்டும். உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.
தற்போது, வானிலை சாதகமாக இருந்தாலும் நீதிமன்ற தீர்ப்பை அமலாக்குவதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். சுற்றுச்சூழல் ஆர்வலர் சுனில் தஹியா கூறியதாவது: உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவு எதிர்பாராத விளைவுகளுக்கு வழிவகுக்கும். பசுமைப் பட்டாசு உற்பத்தி செய்யவும், வெடிக்கவும் அனுமதிப்பது, காற்று மாசுபாட்டை சட்டப்பூர்வமாக அதிகரிப்பது போன்றதாகி விடும். பசுமைப் பட்டாசுகள் 30 சதவீதம் குறைவான மாசுபாட்டை வெளியிடும் என்றாலும், தீபாவளியின் போது பயன்படுத்தப்படும் அதிக அளவிலான பட்டாசுகளால் மாசு பல மடங்கு அதிகரிக்கும். ஆனால், தீபாவளிப் பண்டிகை அக்டோபர் மத்தியிலேயே வந்து விட்டதால், ஓரளவு நிம்மதி. இதுவே, நவம்பர் மாதம் என்றால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.



சனாதனத்துக்கு வெற்றி


டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா கூறுகையில், “டில்லியில் பட்டாசை தடை செய்ய நீதிமன்றத்தில் முந்தைய ஆம் ஆத்மி அரசு வாதங்களை முன்வைத்ததை நீண்ட காலமாக நாங்கள் கூறி வந்தோம். டில்லி மக்கள் இப்போது தான் சரியான அரசை தேர்ந்தெடுத்துள்ளனர். காற்று மாசுக்கு பல காரணங்கள் உள்ளன. மாசை கட்டுப்படுத்த பா.ஜ., அரசு பல நடவடிக்கைள் எடுத்து வருகிறது. பட்டாசு விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சனாதனவாதிகளுக்கு கிடைத்த வெற்றி,”என்றார்.

நேர்மையான பரிந்துரை


வடகிழக்கு லோக்சபா தொகுதி பா.ஜ., - எம்.பி., மனோஜ்குமார் திவாரி கூறுகையில், “டில்லி அரசின் நேர்மறையான பரிந்துரை காரணமாக இந்த உத்தரவு சாத்தியமானது. முந்தைய ஆம் ஆத்மி அரசு நீதிமன்றத்தில் எதிர்மறையான பரிந்துரைகளை வழங்கியது. மேலும், பசுமைப் பட்டாசுகளையும் தடை செய்யவே ஆம் ஆத்மி அரசு விரும்பியது. சனாதன தர்மம் மற்றும் அதன் பண்டிகைகள் மீதான ஆம் ஆத்மி கட்சியின் நோக்கங்கள் நேர்மையற்றவை,”என்றார்.

மக்களின் கருத்து

பொதுப்பணித் துறை அமைச்சர் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா கூறுகையில், “அரசு மாறிய பிறகே ஹிந்து பண்டிகை கொண்டாட்டத்துக்கு விதிக்கப்பட்டு இருந்த தடை நீங்கியுள்ளது. தீபாவளியைக் கொண்டாடும் உரிமையைப் பாதுகாக்க முந்தைய ஆம் ஆத்மி அரசு நீதிமன்றத்துக்குச் செல்லவில்லை. ஆனால் நாங்கள், மக்களின் கருத்துக்களை நீதிமன்றத்தில் முன்வைத்தோம். எனவேதான், தீபாவளியை பாரம்பரிய முறையில் பச்சை பட்டாசுகளுடன் கொண்டாட உத்தரவு கிடைத்துள்ளது,”என்றார்.

அரசை நம்புகிறேன்

ஆம் ஆத்மி தலைவரும், டில்லி முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான கோபால் ராய் கூறுகையில், காற்றின் தரத்தை மேம்படுத்த பா.ஜ., அரசு தொடர்ந்து பாடுபடும் என நம்புகிறேன். மாசுபாட்டைக் குறைக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளும் எடுத்தோம். தீபாவளியின் போது பசுமை பட்டாசுகளை அனுமதிப்பது குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம், டில்லி அரசு விதிமுறைகளைப் பின்பற்றி, பண்டிகையின் போது காற்றின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,”என்றார்.








      Dinamalar
      Follow us