ADDED : பிப் 23, 2024 11:28 PM
சென்னை:'சிதம்பரம் நடராஜர் கோவிலில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்பதை, ஆதாரங்களுடன் நிரூபிக்காவிட்டால், நேரில் ஆய்வு செய்வோம்' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோவில்கள், தொல்லியல் சின்னங்கள் பாதுகாப்பு குறித்த வழக்குகள், நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அறநிலையத்துறை சார்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ''பொது தீட்சிதர்கள் குழு தரப்பில், நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தை மீறி, கட்டுமானங்களை மேற்கொள் கின்றனர். மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைத்து, கோவில் வளாகத்தை ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும்,'' எனக்கூறி, நேற்று கூடுதல் புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்தார்.
அப்போது, பொது தீட்சிதர் குழுவில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட மனுதாரர் நடராஜ தீட்சிதர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.கனகராஜ், கட்டுமானங்கள் நடந்து வருவது தொடர்பான கூடுதல் படங்கள், வீடியோக்கள் உள்ளதாக குறிப்பிட்டார்.
புகைப்படங்களை பார்வையிட்ட நீதிபதிகள், பொது தீட்சிதர்கள் குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், 'சட்ட விரோதமாக கட்டுமானம் நடக்கவில்லை; மேற்கொண்டு கட்டுமானம் செய்யமாட்டோம் என, ஏற்கனவே நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளீர்கள். இந்த உத்தரவாதத்தை மீற வேண்டாம்.
'அடுத்த விசாரணையின்போது, கட்டுமானங்கள் நடக்கவில்லை என்பதற்கான ஆதாரங்களுடன் நிரூபிக்காவிட்டால், நாங்களே நேரடியாக கோவிலை ஆய்வு செய்வோம்' என்றனர்.
மேலும், அறநிலையத்துறை சார்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும், நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தையும், மீண்டும் பொது தீட்சிதர்கள் குழுவுக்கு தெரியப்படுத்தும்படி கூறி, வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.