முள் படுக்கையை மலர் படுக்கையாக்குவோம் காமராஜர் மக்கள் கட்சி இணைப்பு விழாவில் வாசன் சூளுரை
முள் படுக்கையை மலர் படுக்கையாக்குவோம் காமராஜர் மக்கள் கட்சி இணைப்பு விழாவில் வாசன் சூளுரை
ADDED : டிச 21, 2025 01:34 AM

ஈரோடு: தமிழருவி மணியன் தலைமையிலான காமராஜர் மக்கள் கட்சியை த.மா.கா.,வுடன் இணைக்கும் விழா நேற்று ஈரோடில் நடந்தது.
இணைப்பு நிகழ்ச்சியில் த.மா.கா., தலைவர் வாசன் பேசியதாவது:
இந்த இணைப்பு நிகழ்ச்சி உணர்வுப்பூர்வமானது. எங்களுக்கு யானை பலம் கிடைத்துள்ளது. தமிழகத்தில் உள்ள நல்லவர்கள், மரியாதை உள்ளவர்கள் நம்மோடு சேரும் காலம் வந்துள்ளது.
அதற்கு தமிழருவி மணியன் அடித்தளம் இட்டிருக்கிறார். இந்த இணைப்பு நிகழ்ச்சியின் கதாநாயகன் தமிழருவி மணியன் தான். அதனால், அவரைப் போற்றியே அனைவரும் பேசுவோம். மற்ற அரசியல் தேவையில்லை.
உலக தமிழர்கள், மதிப்புக்குரிய அரசியல் தலைவர்களால் மதிக்கப்படக்கூடிய தலைவர் தமிழருவி மணியன். காமராஜர், மூப்பனாருடன் நெருங்கி பழகியவர். அவர்களோடு இணைந்து அரசியல் செய்தவர்.
அர்ப்பணிப்பு அவருக்கென தனித்த சிறப்புகள் உள்ளன. தனக்கு சரி என பட்டதை, துணிச்சலாக பேசக் கூடியவர். பொது வாழ்வில் லாபம், நஷ்டம் பார்க்காமல் இன்று வரை செயல்படுகிறவர்.
அவருடைய நேர்மைத் தன்மையால், அவர் சேகரித்ததை விட இழந்தது ஏராளம். இருந்தபோதும், தன்னுடைய அன்பால், பல நல்லவர்களை நண்பர்களாக பெற்றிருக்கிறார்.
எந்த விஷயத்தையும், மக்கள் நலன் சார்ந்தே சிந்திப்பார்; அதன் வழியில் செயல்படுவார் தமிழருவி மணியன்.
அவர், பல விஷயங்களில் சமரசம் செய்திருந்தால், எவரும் எட்ட முடியாத உயர்ந்த பதவிகளை பெற்று இருப்பார். 'வளமான தமிழகம்; வலிமையான பாரதம்' உருவாக்க தன்னையே அர்ப்பணித்தவர்.
தேசிய அளவில் என்னுடைய வளர்ச்சியில் அக்கறை உடையவர்; என்னுடைய முடிவுகளின் பின்னணியில் அவருடைய ஆலோசனைகள் உண்டு. இன்றைய அரசியல் சூழலில் பணத்தை நோக்கித்தான் அனைவருடைய பயணமும் இருக்கிறது. அரசியல் நேர்மை என்பது இல்லை.
த.மா.கா., கடந்த, 12 ஆண்டுகளாக மலர் படுக்கையில் இல்லை. முள் படுக்கையில் தான் உள்ளது. அதில் இருந்து த.மா.கா.,வை மீட்கவே, தன்னுடைய பிறந்த நாள் பரிசாக காமராஜர் மக்கள் கட்சியை த.மா.கா.,வுடன் இணைத்துள்ளார் தமிழருவி மணியன்.
வெற்றி, தோல்வி முக்கியமல்ல; த.மா.கா.,வில் கூட்டு குடும்பமாக பயணிப்பதே இலக்கு.
இவ்வாறு அவர் பேசினார்.
த.மா.கா.,வில், தன் கட்சியை இணைத்து, தமிழருவி மணியன் பேசியதாவது:
த.மா.கா.,வில் மூப்பனார், வாசன் இருந்த போது, நான் பொதுச் செயலாளராக இருந்தேன். அக்கட்சியை காங்., உடன் இணைத்து, தமிழக காங்., தலைவராக வாசன் இருந்த போதும், பொதுச் செயலாளராக இருந்தேன். இருந்தாலும், நான் த.மா.கா.,வோடு தான் பயணிக்கிறேன்.
சத்தியமூர்த்தி பவனில் இருப்பது காங்., கட்சி அல்ல; அது ஒரு லிமிடெட் கம்பெனி. இதை சொல்ல எனக்கு பூரண உரிமை உண்டு. மானமுள்ள காங்கிரசார் வாசன் பக்கமே நிற்க வேண்டும்.
எனக்கு முதல்வர் ஸ்டாலின் மீது எந்த கோபமும் இல்லை. கடந்த, 50 ஆண்டுக்கு முன் தி.மு.க., தலைவர்கள் யார்? ஆண்டிகளாய், பரதேசிகளாய் நின்றவர்கள். இன்று அத்தனை பேரும் அதானியாய், அம்பானிகளாய் மாறி விட்டனர். பொதுச்சொத்தை அபகரித்துத்தானே வளர்ந்துள்ளனர்.
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தி.மு.க.,வினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கான கோப்புகளை வெளியிட்டார்.
பாடுபட வேண்டும் தி.மு.க., வக்கீல் ஒருவர் வெட்கமின்றி, 'அவை அனைத்தும், அந்தந்த தலைவர்களின் சொத்துக்கள். அந்த பட்டியலைத்தானே அண்ணாமலை வெளியிட்டுஉள்ளார்' என்றார்.
'அந்த சொத்து எப்படி வந்தது என்பதுதான் ஊழல்' என, நான் கூறினேன்.
தி.மு.க.,விடம் இருந்து தமிழகத்தை காப்பாற்றவே வாசனோடு கைகோர்த்துஉள்ளேன்.
த.வெ.க., தலைவர் விஜய்க்கு, 20 சதவீத ஓட்டுகள் உள்ளன. இதை வைத்து கொண்டு முதல்வராக முடியாது. 23 சதவீத ஓட்டு பெற்ற அ.தி.மு.க., 18 சதவீதம் உள்ள பா.ஜ., விஜயின் 20 சதவீதத்துடன் சேர்ந்தால், 61 சதவீத ஓட்டாக மாறும். அப்படி கூட்டணி அமைந்தால், அது மிகப் பெரிய அளவில் வெற்றியடையும்.
'நான் தான் முதல்வராவேன்' என்ற எண்ணத்தை, தியாக சிந்தனையோடு உதறிவிட்டு, விஜய் வலுவான கூட்டணி அமைக்க வேண்டும். பின், தமிழக நலனுக்காக பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

