பொங்கலுக்கு பிறகு பாருங்கள் புதிர் போடுகிறார் செங்கோட்டையன்
பொங்கலுக்கு பிறகு பாருங்கள் புதிர் போடுகிறார் செங்கோட்டையன்
ADDED : டிச 21, 2025 02:13 AM

சென்னை: ''சட்டசபை தேர்தல் கூட்டணி முடிவை, விஜய் தான் எடுப்பார். பொங்கலுக்குப் பின், தமிழகத்தில் என்ன மாற்றம் நடக்கப் போகிறது என்பதை பாருங்கள்,'' என, த.வெ.க., நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
ஈரோடில் நடந்த விஜய் பிரசார கூட்ட நிகழ்ச்சி, தமிழகம் மட்டும் இன்றி, இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த நிகழ்ச்சி குறித்து, விரைவில் முடிவு செய்யப்படும்.
வரும் 2026 சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும், த.வெ.க., தலைவர் விஜய் தான் எடுப்பார்.
வரும் பொங்கலுக்குப் பின், தமிழகத்தில் என்னென்ன மாற்றம் நடக்கப் போகிறது என்பதை நீங்கள் காணப் போகிறீர்கள்.
மாற்றுக் கட்சிகளில் இருந்து, எங்கள் கட்சிக்கு இன்னும் நிறைய பேர் வர உள்ளனர்; எங்களோடு பேசிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் த.வெ.க.,வில் சேரும் நிகழ்வு விரைவில் நடக்கும்.
வி.சி., தலைவர் திருமாவளவன் என்ன வேண்டுமானாலும் பேசுவார். அவருடைய கருத்துகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது.
எங்கள் லட்சியத்தை நோக்கி மட்டுமே பயணிக்கிறோம். அதனால், அடுத்த கட்சிகள் என்ன செய்கின்றன என்பது குறித்த சிந்தனை எங்களுக்கு இல்லை. தமிழகத்தில் சிறந்த ஆட்சியை த.வெ.க.,வால் மட்டுமே வழங்க முடியும்.
தி.மு.க., அமைச்சர் சேகர்பாபுவை சந்தித்து விட்டு த.வெ.க.,வில் இணைந்தேன்; அதனால், தி.மு.க.,வின் 'பி டீம்' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், என்னை விமர்சிக்கிறார்.
அவர், உண்மையான பா.ஜ.,காரராக செயல்படவில்லை. அ.தி.மு.க., காரராகவே இருக்கிறார். அதனால், அவர்தான் அ.தி.மு.க.,வின் 'பி டீம்!' அவர், பா.ஜ.,வில் இருந்து விலகி அ.தி.மு.க.,வில் இணைத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

