விதிமுறைகளை மீறிய நியமனம் நகராட்சி நிர்வாக செயலருக்கு கவர்னரின் துணை செயலர் கடிதம்
விதிமுறைகளை மீறிய நியமனம் நகராட்சி நிர்வாக செயலருக்கு கவர்னரின் துணை செயலர் கடிதம்
ADDED : அக் 06, 2025 02:13 AM
மாநகராட்சிகளில் விதிமுறைகளுக்கு முரணான, பதவி நியமனம் தொடர்பான புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க, கவர்னரி ன் துணை செயலர் கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழக மாநகராட்சிகளில் உதவி கமிஷனர் பதவிகளுக்கு, 2023ம் ஆண்டுக்கான தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் விதிகளுக்கு முரணாக, வருவாய் துறையை சேர்ந்த துணை கலெக்டர்களை பணி மாறுதல் செய்வதாக, அமைச்சு பணியாளர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், மாநகராட்சி அமைச்சு பணியாளர் சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியம் கூறியதாவது:
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி விதிகள் 2023ன் படி, மாநகராட்சி அமைச்சு பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுகிறது. ஆனால், வருவாய் துறையினர், 1996 விதி களின்படி, அங்குள்ள துணை கலெக்டர்களை, மாநகராட்சி உதவி கமிஷனர்களாக நியமித்து வருகின்றனர்; 1996 விதிகள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டு விட்டன.
ஆனால், விதிமீறி வருவாய் துறையினரை பணி மாறுதல் செய்து வருகின்றனர். இந்த பணிமாறுதல் நியமனங்களை ரத்து செய்து, விதிகளின்படி தகுதி பெற்ற மாநகராட்சி அமைச்சு பணியாளர்களை நியமனம் செய்யக்கோரி, பலமுறை அரசுக்கு கடிதங்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை.
இதையடுத்து, தமிழக கவர்னருக்கு ஜூலை, 14ல் புகார் அனுப்பியிருந்தோம். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு, நகராட்சி நிர்வாக முதன்மை செயலருக்கு, கவர்னரின் துணை செயலர் கடிதம் அனுப்பியுள்ளார். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பர் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.