179 கோர்ட்டுகளில் 'சிசிடிவி' பொருத்த ரூ.20 கோடி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
179 கோர்ட்டுகளில் 'சிசிடிவி' பொருத்த ரூ.20 கோடி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
ADDED : ஜன 29, 2025 01:10 AM
சென்னை:'தமிழகத்தில் உள்ள, 179 நீதிமன்ற வளாகங்களில், 'சிசிடிவி' பொருத்த, 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும்' என, தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்ற நிர்வாக பதிவுத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களுக்கும் பாதுகாப்பு வழங்கவும், 'மெட்டல் டிடெக்டர்'கள், 'சிசிடிவி கேமரா'க்கள் பொருத்தப்பட்ட பாதுகாப்பு சோதனைசாவடிகளுடன், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிடக்கோரி, தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தரப்பில், பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, உயர் நீதிமன்ற நிர்வாக பதிவாளர் ஹரி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 'தமிழகத்தில் உள்ள, 179 நீதிமன்றங்களில் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த, 7,774 கண்காணிப்பு கேமராக்கள், மானிட்டர்கள் பொருத்தப்பட உள்ளன.
இதற்காக, மாநில அரசிடம், 20 கோடியே, 4 லட்சத்து, 51,791 ரூபாய் நிதி கோரி, கடந்தாண்டு டிச., 2ல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.
இதை பதிவு செய்த 'முதல் பெஞ்ச்', 'நிதி ஒதுக்கீடு தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது; விசாரணையை பிப்., 27க்கு தள்ளிவைத்தது.

