கூடங்குளம் 3, 4வது அணு உலை மின்சாரம் விலை கேட்டு மத்திய மின் துறைக்கு கடிதம்
கூடங்குளம் 3, 4வது அணு உலை மின்சாரம் விலை கேட்டு மத்திய மின் துறைக்கு கடிதம்
ADDED : பிப் 14, 2024 01:52 AM
சென்னை:கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மூன்றாவது, நான்காவது அணு உலைகளில் இருந்து வழங்கப்படும் மின்சாரத்தின் விலை குறித்த விபரத்தை கேட்டு, மத்திய மின் துறைக்கு, தமிழக மின் வாரியம் கடிதம் எழுதியுள்ளது.
மத்திய அரசின் இந்திய அணுமின் கழகத்திற்கு, திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில், கூடங்குளம் அணுமின் நிலையம் உள்ளது.
அங்கு தலா, 1,000 மெகா வாட் திறன் உடைய இரு அணு உலைகளில், மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
அதில், தமிழகத்திற்கு தினமும், 1,152 மெகா வாட்டும்; மீதி மின்சாரம், மற்ற மாநிலங்களுக்கும் வழங்கப்படுகிறது. 1 யூனிட் மின் கொள்முதல் விலை, 3.50 ரூபாய் - 4 ரூபாயாக உள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில், 1,000 மெகாவாட் திறனில் மூன்றாவது, நான்காவது அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
மூன்றாவது உலையில் அடுத்த ஆண்டும், நான்காவது உலையில், 2026லும் மின் உற்பத்தி துவங்க உள்ளது. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும், தமிழகத்திற்கு வழங்குமாறு, மத்திய மின் துறைக்கு மின் வாரியம் கோரிக்கை விடுத்தது. அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மூன்றாவது, நான்காவது உலைகளில் உற்பத்தியாகும் மின்சாரம், தமிழகம் உட்பட பிற மாநிலங்களுக்கு வழங்கப்பட உள்ளது. சில மாநிலங்கள் அந்த மின்சாரத்தை வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதனால், பிற மாநிலங்களுக்கான மின்சாரத்தையும், தமிழகத்திற்கு சேர்த்து ஒதுக்க வாய்ப்புள்ளது.
எனவே, 1 யூனிட் மின்சாரம் என்ன விலைக்கு வழங்கப்படும், எவ்வளவு மின்சாரம் வழங்கப்படும் என்பதை தெரிவிக்குமாறு, மத்திய மின் துறையின் கீழ் இயங்கும் தென் மாநில மின்சார குழுவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அந்த தகவல் கிடைத்த பின், எவ்வளவு மின்சாரம் வாங்கலாம் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

