துணைவேந்தர் காலியிடங்களை நிரப்பக்கோரி முதல்வருக்கு கடிதம்
துணைவேந்தர் காலியிடங்களை நிரப்பக்கோரி முதல்வருக்கு கடிதம்
ADDED : அக் 07, 2025 06:53 AM

சென்னை : 'பல்கலை நிர்வாக பணிகளில் முடக்கம் ஏற்பட்டுள்ளதால், துணைவேந்தர் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கடிதம் எழுதி உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
மாநிலத்தின் பல்வேறு பல்கலைகள், முழுநேர துணைவேந்தர்கள் இல்லாமல் பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. இதன் விளைவாக மாநிலத்தில், உயர் கல்வி வளர்ச்சியில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. நிர்வாகம், கல்வி பணிகளில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், முக்கிய ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே இருக்கின்றன.
துணைவேந்தர் இல்லாததால், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, பல்கலைகளால் சரியாக பயன்படுத்த முடியாமல் போகிறது.
தேர்வு முடிவு வெளியீடு மற்றும் சான்றிதழ் வினியோகத்தில் தாமதம் போன்றவற்றால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.
தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று குழுமம், தேசிய தரவரிசை கட்டமைப்பு, ஆகியவற்றில், நம் பல்கலையின் வாய்ப்பு பறிபோகிறது. பல்கலைகளுக்கு, வலிமையான, தொலைநோக்கு கொ ண்ட நிரந்தரமான தலைமை தேவை என்ற கருத்தை, முதல்வர் ஒதுக்கிவிட இயலாது. பல்கலை துணைவேந்தர்கள், நிர்வாகத்தின் தலைவர்களாக மட்டுமல்லாமல், கல்வியின் தலைவர்களாகவும் விளங்குகின்றனர். அவர்களால்தான், தங்கள் தலைமையிலான கல்வி நிறுவனங்களை, சிறந்த வகையில் வழிநடத்த முடியும்.
எனவே, இதில், முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு, தீர்வு காண வேண்டும். கல்வித்தகுதி, நேர்மை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து, துணைவேந்தர்களை நியமிப்பதற்கான காலக்கெடுவுடன் கூடிய வெளிப்படையான நடைமுறையை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.