ADDED : நவ 15, 2024 08:52 PM
அரியலுார்:''பத்தாண்டு காலம் அ.தி.மு.க., சிறந்த ஆட்சியை தந்தது என சிரிக்காமல் பேட்டி கொடுத்து, பொய் மூட்டைகளை பழனிசாமி அவிழ்த்துவிடுகிறார்,'' என, முதல்வர் ஸ்டாலின் கிண்டலடித்தார்.
அரியலுார் மாவட்டம், கொல்லாபுரத்தில் நடந்த அரசு விழாவில், 507 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், 53 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 21,862 பயனாளிகளுக்கு, 173 கோடியே, 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
திட்டத்தை அறிவித்தோம்; நிதி ஒதுக்கினோம்; அதிகாரிகள் பார்த்துக் கொள்வர், நாம் ஓய்வெடுப்போம் என, எண்ணுகிறவன் நான் இல்லை. கடந்த காலத்தில் ஒரு சிலர் இருந்தனர். நாட்டில் என்ன நடக்கிறது என்றும் தெரியாது. தெரிந்தாலும் தெரியாத மாதிரியே, 'அப்படியா? டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்' என்று சொல்வர். அவர்கள் பிரச்னைகளை கண்டுகொள்ளாமல் இருந்தனர். நான் பிரச்னைகளை நேர் கொண்டு நிற்கிறேன்.
ஒவ்வொரு பிரச்னையையும் தீர்க்கிறேன். மக்களுக்காக பார்த்து, பார்த்து திட்டங்களை தீட்டுகிறேன். திட்டங்கள் எப்படி செயல்படுகிறது என, கள ஆய்வு செய்கிறேன். சொன்னால் சொன்ன நாட்களுக்குள் திட்டங்களை திறந்து வைக்கிறேன். அதனால் தான் இந்த ஸ்டாலின் எங்கு சென்றாலும், மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கின்றனர். தேடி வந்து மனுக்களை கொடுக்கின்றனர். அந்த நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன்.
தமிழக மக்கள் என் மீதும், தி.மு.க., மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையையும், அளவில்லாமல் பொழியும் அன்பும் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு கொஞ்சம் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கொஞ்சம் அல்ல நிறையவே கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
எங்கே மக்கள் தன்னை மறந்து விடுவரோ என்று நினைத்து நாள்தோறும் மீடியா முன் தன் பொய் மூட்டைகளை அவிழ்த்துக்கொண்டு இருக்கிறார்.
கடந்த 2011 முதல் 2021 வரை பத்தாண்டு காலம் சிறந்த ஆட்சியை அ.தி.மு.க.., தந்ததாகவும், ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது நிறைய திட்டங்களை கொண்டு வந்து, அவர் மறைவிற்கு பின், நான்காண்டு காலாம், தான் சிறப்பாக ஆட்சி செய்ததாகவும் சிரிக்காமல் பேட்டி கொடுக்கிறார்.
பொய்க்கு மேக்கப் போட்டால் அது உண்மை ஆகிவிடாது. இன்னும் பளிச்சென்று அம்பலப்பட்டு போகும்.
இவ்வாறு அவர் பேசினார்.