ஊர்ப்புற நுாலகங்களை தரம் உயர்த்த வலியுறுத்தி நுாலகர்கள் உண்ணாவிரதம்
ஊர்ப்புற நுாலகங்களை தரம் உயர்த்த வலியுறுத்தி நுாலகர்கள் உண்ணாவிரதம்
ADDED : நவ 08, 2025 02:28 AM

சென்னை: ஊர்ப்புற நுாலகங்களை தரம் உயர்த்த வலியுறுத்தி, சென்னையில் நுாலகர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே, தமிழ்நாடு அரசு பொது நுாலகத்துறை அலுவலர் ஒன்றியம் சார்பில், நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
ஊர்ப்புற நுாலகங்களை தரம் உயர்த்தி, நுாலகர்களுக்கு மூன்றாம் நிலை நுாலகர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் அமிர்தகுமார் கூறியதாவது:
ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி, பொதுநுாலகத்துறை நுாலகர்கள், 12 ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால், எந்தவித முன்னேற்றமும் இல்லை. எங்களுடைய போராட்டத்திற்கு தமிழக அரசே காரணம்.
ஒவ்வொரு அரசு பள்ளியும், தேவைக்கு ஏற்ப தரம் உயர்த்தப்படுகிறது. அதேபோல, நுாலகங்களும் தரம் உயர்த்தப்பட வேண்டும்.
ஆனால், 2013 முதல், நுாலகங்கள் தரம் உயர்த்தப்படாமல் உள்ளன. இந்த, 12 ஆண்டுகளில், 100 நுாலகங்கள் தரம் உயர்த்தப்பட்டிருந்தால், புதிதாக 1,000க்கும் அதிகமான பணியிடங்கள் உருவாக்கப்பட்டிருக்கும்.
ஊர்ப்புற நுாலகர்கள், மூன்றாம் நிலை நுாலகர்களாக பதவி உயர்வு பெற்றிருப்பர். ஆனால், தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

