மருந்தாளுனராக பதிவு செய்ய வருகிறது புதிய கட்டுப்பாடு
மருந்தாளுனராக பதிவு செய்ய வருகிறது புதிய கட்டுப்பாடு
ADDED : நவ 08, 2025 02:29 AM
சென்னை: தமிழகத்தில் மருந்தாளுனராக பதிவு செய்ய, இந்திய மருந்தியல் தகவல் கையேட்டுக்கு சந்தா செலுத்துவது கட்டாயமாக்கப்பட உள்ளது.
நாடு முழுதும் பி.பார்ம்., - எம்.பார்ம்., படித்தவர்கள், சம்பந்தப்பட்ட மாநில மருந்திய கவுன்சில்களில் பதிவு செய்வது அவசியம். அப்போது தான், அவர்கள் மருந்து விற்பனையிலோ, மருந்து உற்பத்தி சார்ந்த பணிகளிலோ ஈடுபட முடியும்.
இதற்கிடையே, இந்திய மருந்தியல் ஆணையம், என்.எப்.ஐ., எனப்படும், மருந்தியல் தகவல் கையேட்டை வெளியிட்டு வருகிறது.
அந்த கையேட்டில், அனுமதிக்கப்பட்டுள்ள மருந்து விபரங்கள், அவற்றின் மூலக்கூறுகள், கூட்டு மருந்து பொருள்கள், பலன்கள், பாதிப்புகள், எதிர்விளைவுகள் என, பல்வேறு விபரங்கள் இடம் பெறுகின்றன.
குறிப்பாக, தேவையின்றி எந்த மருந்தையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கக்கூடாது என்பதை உறுதிபடுத்தவும், மருந்துகள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அந்த தகவல் கையேடு, குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிடப் படுகிறது.
'ஒவ்வொரு மருந்தாளுனரும், அதற்கு சந்தா செலுத்துவது கட்டாயம்' என, உத்தர பிரதேச மாநில அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
தமிழகத்திலும் அது செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, மாநில மருந்தியல் கவுன்சிலில் பதிவு செய்யும் அனைவரும் இனி, என்.எப்.ஐ., கையேட்டுக்கு சந்தா செலுத்த வேண்டும்.
இதன் வாயிலாக, மாநிலம் முழுதும், 60,000 மருந்தாளுனர்களுக்கு, மருந்துகள் தொடர்பான புதிய தகவல்களும், விபரங்களும் சென்றடையும்.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழக மருந்தியல் கவுன்சில் மற்றும் இந்திய மருந்து உற்பத்தி ஆணையம் இடையே இன்று கையெழுத்தாகிறது.

