'நாயகன்' மறுவெளியீடுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
'நாயகன்' மறுவெளியீடுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
ADDED : நவ 08, 2025 02:29 AM
சென்னை: கமல் நடித்த, நாயகன் திரைப்படத்தின் மறு வெளியீட்டுக்கு தடை விதிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
கடந்த 1987ம் ஆண்டு, இப்படம் வெளியானது.கமல் பிறந்த நாளை யொட்டி, மறு வெளியீடு செய் யப்பட்டு உள்ளது. இதற்கு தடை விதிக்க கோரி, 'எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி' நிறுவன உரிமையாளர் எஸ். ஆர்.ராஜன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார்.
மனுவில், 'ஏ.டி.எம்., புரொடக் ஷன்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து, நாயகன் பட வெளியீடு உரிமையை, 2023ம் ஆண்டு பெற்றுள்ளோம் இதை மறைத்து, வி.எஸ்., பிலிம்ஸ் இன்டர்நேஷ னல் நிறுவனம், நாயகன் திரைப்படத்தை மறு வெளியீடு செய்துள்ளது. இது சட்டவிரோதம்' என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி என்.செந்தில்குமார் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வி.எஸ்., பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, நாயகன் திரைப்படம், இந்திய சினிமாவில் ஒரு மைல்கல். மறு வெளியீட்டை அங்கீகரிக்கும் வகையில் ஒப்பந்தம் செய்துள்ளோம்.
''பதிப்புரிமை மீறல் எதுவும் இல்லாததால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல,'' என்றார்.
இதை ஏற்ற நீதிபதி, 'ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே படம் மறு வெளியீடு செய்யப்படுவதால், இடைக்கால தடை விதிக்க முடியாது' என உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு பதிலளிக்க, ஏ.டி.எம்., புரொடக்ஷன்ஸ், வி.எஸ்., பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.
விசாரணையின்போது, நாயகன் படத்தை, 15 முறைக்கு மேல் பார்த்துள்ளதாகவும், படத்தின் ஒவ்வொரு, 'பிரேம்' வாரியாக, தன்னால் இப்போது சொல்ல முடியும் என்றும், நீதிபதி என்.செந்தில்குமார் கூறினார்.
அதற்கு வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், இப்படத்தை, 50 முறைக்கு மேலாக தான் பார்த்துஉள்ளதாக குறிப்பிட்டார்.

