புத்தகத் தேர்வு நடைமுறையை திடீரென மாற்றியதால் நான் விலகி விட்டேன்: நுால் தேர்வு குழு உறுப்பினர் சுல்தான் இஸ்மாயில் மனம் திறப்பு
புத்தகத் தேர்வு நடைமுறையை திடீரென மாற்றியதால் நான் விலகி விட்டேன்: நுால் தேர்வு குழு உறுப்பினர் சுல்தான் இஸ்மாயில் மனம் திறப்பு
UPDATED : நவ 07, 2026 12:00 AM
ADDED : நவ 06, 2026 09:36 PM

கோவை: நுாலகத்துக்கு புத்தகம் தேர்வு செய்ய, 13 பேர் கொண்ட குழு விபரம், 2025 நவம்பர் 5ம் தேதி வெளியானது. இதில் மாநில திட்டக்குழு உறுப்பினராக இருந்தவரும், விலங்கியல் துறை பேராசிரியருமான சுல்தான் இஸ்மாயில் இடம்பெற்றிருந்தார்.
நமது நிருபரிடம் அவர் கூறியதாவது:
இளம்பகவத் ஐ.ஏ.எஸ்., பொது நுாலகத்துறை இயக்குனராக பணியாற்றினார். அவர் இருந்தவரை சரியாக சென்றது. பேராசிரியர்கள், நிபுணர்களிடம், ‘உங்களுக்கு என்ன புத்தகம் வேண்டும்’ என்று பட்டியல் கேட்டார். அதில் முக்கியமான புத்தகங்களை தேர்வு செய்யும் பணி நடந்தது.
நான் விலங்கியல், சுற்றுச்சூழல் துறைகளை பார்த்தேன். கல்லுாரிகளில் எந்த புத்தகங்களை வாங்க முடியாது, உயர்கல்வி மற்றும் போட்டி தேர்வுக்கு எது பயன்படும் என்று யோசித்தோம். நன்கறிந்த ஆசிரியர் மற்றும் பதிப்பகத்தை வைத்து தேர்வு செய்தோம். பிறகு ‘சாப்ட்வேர்’ தயாரித்து அந்த புத்தக பட்டியல்களை பதிவேற்றினார்.
திடீரென அந்த நடைமுறைகளை கைவிட்டனர். கடந்த டிசம்பர் மாதம் ஒரு, ‘கூகுள் ஷீட்’ அனுப்பி, புத்தகத்தின் பெயர், ஆசிரியர் பெயர் உள்ளிட்ட விபரங்களை நிரப்ப சொன்னார்கள். ‘வெற்று ஷீட்டில் நிரப்ப முடியாது. பட்டியல் கொடுங்கள்; அதில் தேர்வு செய்கிறேன்’ என கூறினேன். மேலும், ‘இது தவறான நடைமுறை. அதனால் புத்தகங்களை தேர்வு செய்ய முடியாது’ என கூறி விலகிவிட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
