ADDED : பிப் 06, 2024 11:54 PM

சென்னை:எல்.ஐ.சி., நிறுவனத்தின் தலைவர் சித்தார்த் மொஹந்தி, 'இன்டெக்ஸ் பிளஸ்' என்ற, புதிய திட்டத்தை நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். இத்திட்டம், பங்குச்சந்தை சார்ந்த, தவணை முறையில் பிரீமியம் செலுத்தும் ஆயுள் காப்பீட்டுடன் கூடிய தனி நபர் சேமிப்பு திட்டம்.
நடப்பில் உள்ள ஒவ்வொரு பாலிசியிலும், ஆண்டுதோறும் செலுத்தும் பிரீமிய தொகையில் குறிப்பிட்ட சதவீதம், குறிப்பிட்ட கால இடைவெளியில் உறுதியளிப்பு தொகையாக தரப்படும். இந்த தொகை, பாலிசி கணக்கில் சேர்க்கப்பட்டு, அதற்கேற்ப கூடுதல் யூனிட்கள், பாலிசி கணக்கில் வரவு வைக்கப்படும்.
குறைந்தபட்ச நுழைவு வயது, 90 நாட்கள் நிறைவடைந்திருக்க வேண்டும். அடிப்படை காப்பீட்டு தொகையை பொறுத்து அதிகபட்ச வயது, 50 அல்லது 60 வயது வரை இருக்கலாம்.
இதன்படி, 50 வயது வரை செலுத்தும் பிரீமியத்தின், ஏழு முதல் 10 மடங்கு வரை அடிப்படை காப்பீட்டு பாதுகாப்பும்; 51 வயது முதல், 60 வயதானவர்களுக்கு செலுத்தும் பிரீமியத்தில், ஏழு மடங்கு அடிப்படை காப்பீட்டு பாதுகாப்பும் கிடைக்கும்.
ஆண்டு பிரீமிய தொகையை பொறுத்து, பாலிசி காலம் குறைந்தபட்சம், 10 அல்லது 15 ஆண்டுகள்; அதிகபட்சம், 25 ஆண்டுகள். அதிகபட்ச பிரீமிய தொகை வரையறை ஏதுமில்லை.
குறைந்தபட்ச பிரீமியம், 30,000 ரூபாய். இது, ஆண்டுக்கு ஒரு முறை. அரையாண்டுக்கு, 15,000 ரூபாய்; காலாண்டிற்கு, 7,500 ரூபாய்; மாதத்திற்கு, 2,500 ரூபாயாக இருக்கும்.

