டாக்டர் சுப்பையா கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை
டாக்டர் சுப்பையா கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை
ADDED : மே 20, 2026 12:41 AM

- டில்லி சிறப்பு நிருபர் -
டாக்டர் சுப்பையா கொலை வழக்கில், குற்றவாளிகளை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது.
சென்னையை சேர்ந்த நரம்பியல் டாக்டரான சுப்பையா, சொத்து தகராறு காரணமாக கடந்த, 2013ல் கூலிப்படையினரால் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் சாலையில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்டார்.
...
இந்த வழக்கில், டாக்டர் சுப்பையாவின் உறவினரான பொன்னுசாமி, அவரது மனைவி மேரி புஷ்பம், மகன்கள் பேசில், போரிஸ், பேசிலின் நண்பர்களான வில்லியம்ஸ், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிப்படையைச் சேர்ந்த ஏசு ராஜன், முருகன், செல்வபிரகாஷ் மற்றும் அய்யப்பன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கில் அய்யப்பன் அப்ரூவர் ஆனார்.
இந்த வழக்கில் கடந்த, 2015ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்கிய சென்னை அமர்வு நீதிமன்றம், பொன்னுசாமி, பேசில், வில்லியம், ஜேம்ஸ் சதீஷ்குமார், போரிஸ், முருகன், செல்வபிரகாஷ் ஆகியோருக்கு துாக்குத் தண்டனையும், மேரி புஷ்பம், ஏசு ராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.
அப்ரூவரான அய்யப்பன், அரசு சாட்சி என்பதால் அவருக்கு தண்டனை விதிக்கப்படவில்லை.
இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 'குற்றஞ்சாட்டப்பட்ட ஒன்பது பேர் மீதான குற்றச்சாட்டுகள் சரிவர நிரூபிக்கப்படவில்லை' எனக் கூறி, அவர்களை விடுவித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
...
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ் சந்திர சர்மா அடங்கிய அமர்வு, நேற்று தீர்ப்பளித்தது. அதன் விபரம்:
டாக்டர் சுப்பையா வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் மிகப்பெரிய தவறை செய்திருக்கிறது. விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை முறையாக ஆராயாமல் குற்றவாளிகளை விடுதலை செய்துள்ளது.
விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது சரியல்ல. இவ்வளவு கொடூரமான குற்றத்தை செய்த குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிப்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
அந்த வகையில், விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவில் சில மாற்றங்கள் செய்கிறோம். அதன்படி, குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.
...
இந்த வழக்கின், 'ஏ1' குற்றவாளியான பொன்னுசாமி மற்றும், 'ஏ2' குற்றவாளியான மேரி புஷ்பம் ஆகியோர் தங்கள் மகன்களின் துாண்டுதலின் பேரிலேயே இந்த விவகாரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.
எனவே, வயது முதிர்ந்தவர்களான பொன்னுசாமி மற்றும் மேரி புஷ்பம் ஆகியோர் தங்கள் தண்டனை குறைப்பு தொடர்பாக தமிழக கவர்னருக்கு மனு அளிக்கலாம். அந்த மனுவை பரிசீலித்து கவர்னர் முடிவெடுக்கும் வரை, இருவருக்கும் ஏற்கனவே வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறது.
இவர்கள் இருவரை தவிர்த்து, சுப்பையா கொலை வழக்கில் தொடர்புடைய பிற குற்றவாளிகள் உடனடியாக சரணடைய வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
