நிலத்தகராறில் விவசாயி கொலை தந்தை, 2 மகன்களுக்கு ஆயுள்
நிலத்தகராறில் விவசாயி கொலை தந்தை, 2 மகன்களுக்கு ஆயுள்
ADDED : அக் 31, 2025 02:43 AM

திண்டிவனம்:  செஞ்சி அருகே நிலத்தகராறில் விவசாயியை கொலை செய்த வழக்கில், தந்தைமகன் உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த குறிஞ்சிப்பை கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம், 59; விவசாயி. இவருக்கும், இவரது சகோதரர் ஏழுமலை, 49; குடும்பத்திற்கும் இடையே, சொத்து தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு, மகாலிங்கத்தின் மகன்கள் சங்கர், 40; சேகர், 38; குடும்பத்தினர் குறிஞ்சிப்பை கிராமத்திற்கு வந்திருந்தனர். அவர்கள், ஜன., 17 ம் தேதி நிலத்திற்கு சென்றபோது, சேகருக்கும், அவரது சித்தப்பாவான ஏழுமலைக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது அங்கு வந்த ஏழுமலை மற்றும் அவரது மகன்கள் கிருஷ்ணன்,20; அரவிந்தசாமி, 19; ஆகியோர்  சேகர் மற்றும் தடுக்க வந்த சங்கரை கத்தியால் வெட்டினர்.
அதில், சேகர் சம்பவ இடத்திலேயே இறந்தா ர். சங்கர் படுகாயமடைந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில்,  ஏழுமலை, அவரது மகன்கள் கிருஷ்ணன், அரவிந்தசாமி ஆகியோர் மீது செஞ்சி போலீசார் கொலை வழக்கு பதிந்து கைது செய்தனர்.  வழக்கு விசாரணை திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில்நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி முகமதுபாருக், குற்றம் சாட்டப்பட்டஏழுமலை, கிருஷ்ணன், அரவிந்தசாமி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.15ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
வழக்கில் விரைந்து செயல்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த, செஞ்சி இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும்போலீசாரை விழுப்புரம் எஸ்.பி., சரவணன் பாராட்டினார்.

