மதுபான ஆலைகள் எதிர்ப்பை மீறி கணினிமயம்; முறைகேடுகளை தடுக்க அறிமுகமாகிறது
மதுபான ஆலைகள் எதிர்ப்பை மீறி கணினிமயம்; முறைகேடுகளை தடுக்க அறிமுகமாகிறது
ADDED : ஜன 10, 2025 04:56 AM

சென்னை : மதுபான ஆலை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் எதிர்ப்பை மீறி, ஆலை முதல் கடை வரை, மது வகை விற்பனையை எங்கிருந்தபடியும் கணினியில் கண்காணிக்கும் திட்டத்தை, காஞ்சிபுரம், ராமநாதபுரம் உட்பட, 12 மாவட்ட மதுக் கடைகளில், 'டாஸ்மாக்' நிறுவனம் செயல்படுத்தியுள்ளது.
டாஸ்மாக் நிறுவனம், 4,830 கடைகள் வாயிலாக பீர் மற்றும் மதுபானங்களை விற்கிறது. 11 நிறுவனங்களிடம் இருந்து மது வகைகளையும், ஏழு நிறுவனங்களிடம் இருந்து, பீர் வகைகளையும் கொள்முதல் செய்கிறது.
ஆலைகளில் இருந்து மதுபான வகைகள், டாஸ்மாக் கிடங்கிற்கு லாரிகளில் எடுத்துச் செல்லப்படுகின்றன; அங்கிருந்து, மதுக் கடைகளுக்கு அனுப்பப்படுகின்றன. கடைகளில் மது வகை இருப்பு, தேவைப்படும் மது வகை உள்ளிட்ட விபரங்களை மேற்பார்வையாளர்கள், மேலாளர்களுக்கு தெரிவிக்கின்றனர். அதற்கு ஏற்ப, மது வகைகள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
குறிப்பிட்ட நிறுவனங்களின் மது வகைகளுக்கு முன்னுரிமை அளிப்பது, அரசு நிர்ணயம் செய்திருக்கும் விலையை விட கூடுதலாக விற்பது உள்ளிட்ட முறைகேடுகள் நடக்கின்றன. இவற்றை தடுக்க, கிடங்குகளில் இருந்து, 'குடி'மகன்களுக்கு விற்பது வரை கணினிமயமாக்க, துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டார். அதன்படி, இதற்கான பணி ஆணை, மத்திய அரசின் 'ரெயில்டெல்' நிறுவனத்திடம் டாஸ்மாக் நிர்வாகம் வழங்கியது; திட்டச்செலவு 294 கோடி ரூபாய்.
இந்நிறுவனம், கணினிமய கண்காணிப்பு மென்பொருள் உருவாக்கம், அனைத்து கடைகளுக்கும் கையடக்க 'ஸ்கேனர், பிரின்டர்' கருவிகள் வழங்கி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருங்கிணைப்பு பணிகளை பராமரிக்க வேண்டும். இது தவிர, ஆலையில் மதுபான பாட்டில், 'கன்வேயரில்' செல்லும் இடத்தின் மேல், ஸ்கேன் செய்யும் இயந்திரம் அடங்கிய கட்டமைப்பை, மதுபான நிறுவனங்கள் சொந்த செலவில் ஏற்படுத்த வேண்டும். இதற்கு, ஆலைகள் எதிர்ப்பு தெரிவித்தன. எனவே, 'கணினிமய வசதியை ஏற்படுத்தவில்லை எனில், மது கொள்முதல் நிறுத்தப்படும்' என, டாஸ்மாக் எச்சரித்தது.
இதையடுத்து, கணினிமய கட்டமைப்பை ஏற்படுத்தின. இதைத் தொடர்ந்து, முதல் கட்டமாக அரக்கோணம், ராமநாதபுரம் மாவட்ட மதுக் கடைகளில் கையடக்க வடிவில், 'பார்கோடு ரீடர்' கருவிகளும், பிரின்டர் கருவிகளும் வழங்கப்பட்டன. கருவியில் மது பாட்டில் மேல் உள்ள க்யூ.ஆர்., குறியீடை 'ஸ்கேன்' செய்ததும், பாட்டில் வகை, விலை, விற்பனை நேரம் உள்ளிட்ட விபரங்கள் பதிவாகின்றன. அதிலிருந்து பிரின்ட் கொடுத்ததும் வரும் ரசீது, 'குடி'மகன்களிடம் வழங்கப்படுகிறது.
இதன் வாயிலாக, கடையில் மது விற்பனை விபரங்களை, கணினியில் அதிகாரிகள் எங்கிருந்தபடியும் அறிய முடிகிறது. தற்போது, காஞ்சிபுரம் தெற்கு மற்றும் வடக்கு, திருவள்ளூர் மேற்கு, திருப்பூர், திருச்சி, சிவகங்கை, கரூர், விருதுநகர், திருநெல்வேலி, புதுக்கோட்டை ஆகிய 12 மாவட்ட மதுக் கடைகளில் கணினிமய திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.