‘500 மீட்டர் துாரத்துக்கு அப்பால் உள்ள மது கடைகளை மூட உத்தரவிட முடியாது’
‘500 மீட்டர் துாரத்துக்கு அப்பால் உள்ள மது கடைகளை மூட உத்தரவிட முடியாது’
UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 09:56 PM
சென்னை: ‘தடை செய்யப்பட்ட துாரத்துக்கு அப்பால் அமைந்துள்ள, டாஸ்மாக் மதுக் கடைகளை மூடுவதற்கு உத்தரவிட முடியாது’ என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை பாரிமுனையில், சுகுராமா தெரு, தபால் அலுவலக தெரு, பிரகாசம் சாலை, பிராட்வே, துறைமுகம், வால்டாக்ஸ் சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடக் கோரி, ஸ்ரீதர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், ‘வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்களில் இருந்து 500 மீட்டர் துாரத்துக்குள் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளை மூட அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. அதன் அடிப்படையில், இந்த பகுதிகளில் உள்ள கடைகளை மூட உத்தரவிட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பான வழக்கு, நீதிபதி ஹேமந்த் சந்த் கவுடர் முன், நேற்று விசாரணைக்கு வந்ததது. அப்போது, மனுதாரர் தெரிவித்துள்ள கடைகள், தடை செய்யப்பட்ட துாரத்திற்கு அப்பால் இயங்கி வருவதாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே, உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, தடை செய்யப்பட்ட துாரத்துக்குள் அப்பால் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட முடியாது என உத்தரவு பிறப்பித்துள்ளதாக, நீதிபதி சுட்டிக் காட்டினார்.
மேலும், இந்த விவகாரத்தில் துாரம் தொடர்பான கொள்கையை மறு ஆய்வு செய்வது குறித்து அரசு முடிவெடுக்கலாம் என, கூறி அந்த வழக்கை, நீதிபதி முடித்து வைத்தார்.
