காற்று ஒலி மாசில் சென்னை மோசம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் பட்டியல்
காற்று ஒலி மாசில் சென்னை மோசம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் பட்டியல்
ADDED : நவ 02, 2024 12:32 AM
சென்னை:தீபாவளி பண்டிகை நாளில், சென்னை வளசரவாக்கத்தில் காற்று மாசு, நுங்கம்பாக்கத்தில் ஒலி மாசு, மோசமான நிலைக்கு சென்றதாக, மாசு கட்டுப்பாடு வாரிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையின்போது, பட்டாசு வெடிப்பதற்கு, உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மாசு கட்டுப்பாட்டு வாரியம், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
விழிப்புணர்வு பிரசாரம்
இதன்படி, காலை, மாலை தலா ஒரு மணி நேரம் மட்டுமே, பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது. காற்று மற்றும் ஒலி மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை தவிர்ப்பது குறித்து, பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதனால், ஆண்டுதோறும் காற்று மாசு அதிகரிப்பது கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கை:
தீபாவளி பண்டிகைக்கு முன், ஏழு நாட்கள், தீபாவளி நாள், தீபாவளிக்கு பின் ஏழு நாட்கள் என, 15 நாட்களும் காற்றின் தரம் மற்றும் ஒலி மாசு அளவுகளை துல்லியமாக கண்காணிக்க, மாநில அரசுகளுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், தமிழகத்தில், 17 மாவட்டங்களில், 39 இடங்களில், காற்று, ஒலி மாசு அளவுகள் குறித்த விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
அக்., 24 முதல், நவ., 7 வரை, அந்த இடங்களில் காற்று, ஒலி மாசு அளவுகளை, ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தீபாவளி நாளான அக்., 31ல், காலை 6:00 மணி முதல் நேற்று காலை, 6:00 மணி வரை, காற்று மாசு அளவுகள் ஆய்வு செய்யப்பட்டன.
இதில், அதிகபட்சமாக சென்னை வளசரவாக்கத்தில், ஏ.கியூ.ஐ., எனப்படும் காற்றின் தர குறியீட்டில், 287 புள்ளிகளாக இருப்பது தெரிய வந்துள்ளது.
இது மோசமான நிலை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. திருவொற்றியூரில், காற்றின் தரக்குறியீடு, 150 புள்ளிகளாக பதிவாகி உள்ளது. இது மிதமான பாதிப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்று, அக்., 31 காலை, 6:00 மணி முதல் இரவு, 12:00 மணி வரை, ஒலி மாசு அளவுகள் ஆய்வு செய்யப்பட்டன.
மக்களின் ஒத்துழைப்பு
இதில், சென்னை நுங்கம்பாக்கத்தில், 78.7 டெசிபலாக ஒலி மாசு பதிவாகி உள்ளது. இது தேசிய சராசரி அளவுடன் ஒப்பிடுகையில், மோசமான நிலை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை பெசன்ட் நகரில், ஒலி மாசு அளவு, மிகக் குறைந்த அளவாக, 59.8 டெசிபலாக பதிவாகி உள்ளது.
கடந்த ஆண்டு சென்னை வளசரவாக்கத்தில், காற்று மாசு, 365 புள்ளிகளாகவும், அதிகபட்ச ஒலி மாசு சவுகார்பேட்டையில், 83.1 டெசிபலாக பதிவானது.
இதன் அடிப்படையில், இந்த ஆண்டு காற்று, ஒலி மாசு அளவுகள், சென்னையில் குறைந்துள்ளதாக தெரிகிறது.
தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள், பொது மக்களின் ஒத்துழைப்பு, இதற்கு காரணமாக அமைந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.