ஆடு, கோழி வளர்ப்போருக்கு சங்கம் கால்நடைத்துறை நடவடிக்கை
ஆடு, கோழி வளர்ப்போருக்கு சங்கம் கால்நடைத்துறை நடவடிக்கை
ADDED : ஆக 21, 2025 10:39 PM
சென்னை:தமிழகம் முழுதும் உள்ள, அனைத்து கால்நடை மருந்தகங்களுக்கும் உட்பட்ட பகுதிகளில், ஆடு, கோழி, வளர்ப்போருக்கான சங்கம் துவக்க, கால்நடை பராமரிப்பு துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து, கால்நடை துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகம் முழுதும், 2,741 அரசு கால்நடை மருந்தகங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு மருந்தகத்தின் கீழ் வரும் பகுதிகளில், ஆடு மற்றும் கோழி வளர்ப்போருக்கு, தனித்தனியே சங்கம் அமைக்கப்படுகிறது.
ஒவ்வொரு சங்கத்திற்கும் குறைந்தது 25 நபர்கள் சேர்க்கப்படுகின்றனர். அவர்களில் ஒருவர், முதன்மை அமைப்பாளராக நியமிக்கப்படுவார்.
அவர், தன் சங்கத்தின் முகவரி, உறுப்பினர்களின் தகுதி உள்ளிட்டவற்றை குறித்து, கால்நடை இணை இயக்குநர் கேட்கும் கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பவராக இருக்க வேண்டும்.
கால்நடை வைத்திருக்கும் 18 வயதுக்கு மேற்பட்டோர், இச்சங்கத்தில் சேரலாம். சங்கம் வழியே, அரசின் திட்டங்கள், சேவைகள், கடன் உதவி உள்ளிட்ட சேவைகளை எளிதில் பெற முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

