ADDED : மார் 21, 2025 12:48 AM
சென்னை:'தேசிய கால்நடை பராமரிப்பு துறை சார்பில், 85 சதவீத மானியத்தில், கால்நடை காப்பீடு திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது' என, கால்நடை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
கால்நடைகள் விபத்து, நோய் போன்றவற்றால் இறக்கும் போது, அதை வளர்ப்போருக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது. இதைத்தடுக்க, தேசிய கால்நடை பராமரிப்பு துறை சார்பில், கால்நடை காப்பீட்டு திட்டம், மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்கீட்டில் அமலாகியுள்ளது.
ஒரு பசு அல்லது எருமைக்கு, 40,000 ரூபாய் காப்பீடு செய்ய ஆண்டு காப்பீட்டு தொகையாக, 680 ரூபாய் செலுத்த வேண்டும். இதில், 578 ரூபாயை மத்திய, மாநில அரசுகள் மானியமாக தரும்.
மீதி, 102 ரூபாயை பயனாளி செலுத்த வேண்டும். அதேபோல, 10 ஆடுகளுக்கு 565 ரூபாய் மானியம் போக 100 ரூபாய்; 10 பன்றிகளுக்கு, 561 ரூபாய் மானியம் போக, 99 ரூபாய் செலுத்த வேண்டும்.
மற்றொரு வகை, காப்பீட்டு திட்டத்தில், ஆண்டுக்கு ஒரு பசு மற்றும் எருமைக்கு, 434 ரூபாய் மானியம் போக, 77 ரூபாய்; 10 ஆடுகளுக்கு, 423 ரூபாய் மானியம் போக, 75 ரூபாய்; 10 பன்றிகளுக்கு 421 ரூபாய் மானியம் போக, 74 ரூபாய், பயனாளி செலுத்த வேண்டும்.
இத்திட்டத்தில் சேர விரும்புவோர், அந்தந்த பகுதிகளில் உள்ள கால்நடை மருத்துவமனை, கால்நடை வளர்ச்சித்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.

