சிறப்பு சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி; முறையாக பயன்படுத்த அறிவுரை
சிறப்பு சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி; முறையாக பயன்படுத்த அறிவுரை
ADDED : டிச 06, 2024 12:30 AM
சென்னை: 'சிறப்பு சுய உதவிக் குழுவில் உறுப்பினர்களாக உள்ள, மாற்றுத் திறனாளிகளின் பொருளாதார முன்னேற்றத்திற்காக வழங்கப்படும் வங்கிக் கடனை, உறுப்பினர்கள் முறையாக பயன்படுத்த வேண்டும்' என, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துஉள்ளது.
அதன் அறிக்கை:
மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், ஆண்டுதோறும் ஊரக மற்றும் நகர்ப்புறங்களில், மாற்றுத்திறனாளிகள், முதியோர், நலிவுற்றோர் மற்றும் திருநங்கையரை உறுப்பினர்களாகக் கொண்ட, சிறப்பு சுய உதவிக்குழுக்கள் துவக்கப்படுகின்றன.
கடந்த 2021ம் ஆண்டு முதல், மாற்றுத்திறனாளிகளை உறுப்பினர்களாகக் கொண்ட, 8,336 சிறப்பு சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 3,274 குழுக்களுக்கு, 59.32 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு, நலிவுற்றோர் மேம்பாட்டு நிதியாக, 10,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை, தனி நபர் கடனாக வழங்கப்படுகிறது.
தனிநபர் வாழ்வாதார நிதியாக, 2,410 மாற்றுத் திறனாளிகளுக்கு 9.62 கோடி ரூபாய், தொழில் மேம்பாட்டு நிதியாக, 1,552 சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு 6.92 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.
சிறப்பு சுய உதவிக் குழுக்களில், உறுப்பினர்களாக உள்ள மாற்றுத்திறனாளிகள், பொருளாதார முன்னேற்றத்திற்கு வழங்கப்படும் கடனுதவியை, முறையாக பயன்படுத்தி, வாழ்வில் முன்னேற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.