'தமிழக கூட்டுறவு சங்கங்களில் 34 பிரிவுகளில் கடன் கிடைக்கிறது'
'தமிழக கூட்டுறவு சங்கங்களில் 34 பிரிவுகளில் கடன் கிடைக்கிறது'
ADDED : ஜூன் 05, 2025 03:24 AM
சென்னை: ''கூட்டுறவு சங்கங்களில், பயிர் கடன், நகைக் கடன், காலி வீட்டு மனை வாங்க கடன் உட்பட, 34 வகையான கடன்கள் வழங்கப்படுகின்றன,'' என, கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
கூட்டுறவுத் துறை வாயிலாக வழங்கப்படும் சேவைகளை, மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், விளம்பரம் எழுதப்பட்ட, சென்னை மாநகர பஸ்களின் இயக்கத்தை, அமைச்சர் பெரியகருப்பன் நேற்று துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை செயலர் சத்யபிரத சாஹு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின், அவர் அளித்த பேட்டி:
கூட்டுறவுத் துறை வாயிலாக, மக்களுக்கு பயனுள்ள பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பயிர் கடன், நகைக் கடன், சுய உதவிக் குழு கடன், சிறு வணிக கடன், ஆதரவற்ற பெண்களுக்கு கடன், காலி வீட்டு மனை வாங்க கடன் உட்பட, 34 வகையான கடன்கள், கூட்டுறவுத் துறை வாயிலாக வழங்கப்படுகின்றன.
இதன் வாயிலாக, தனிநபரின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதுடன், சமூகத்தில் அனைத்து தரப்பு மக்களையும், குறிப்பாக, நலிவடைந்த பிரிவினரை கைகொடுத்து துாக்கி விடுகிறோம்.
கூட்டுறவுத் துறை பதிவாளர் அலுவலகம், மண்டல மற்றும் சரக அலுவலகங்கள், 'இ - ஆபீஸ்' எனப்படும் காகித கோப்பு இல்லாத அலுவலகங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
கூட்டுறவு வாயிலாக அளிக்கப்படும் சேவைகளை, மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், சென்னை மாநகரில் இயங்கி வரும், 200 பஸ்களில் இந்த சேவைகள் குறித்து விளம்பரம் செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

