ADDED : மே 23, 2025 12:40 AM
சென்னை:'கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் பராமரிப்புக்கு, விவசாயிகள் கடன் அட்டை வாயிலாக சிறு கடன் பெற விண்ணப்பிக்கலாம்' என, கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து, கால்நடைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கால்நடை வளர்ப்போர் பயன் பெற, 'விவசாயிகள் கடன் அட்டை' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், பசு, எருமை உள்ளிட்ட கறவை மாடுகள் பராமரிப்புக்காக, ஆண்டுக்கு தலா ஒன்றுக்கு 14,000 ரூபாய்; ஆடு ஒன்றுக்கு 2,000 ரூபாய் வீதம் சிறு கடன் வழங்கப்படுகிறது.
கால்நடை வைத்திருப்போர், அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை அல்லது கால்நடை மருந்தகங்களில் கடன் விண்ணப்பங்களை பெறலாம். பொதுத்துறை வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் வாயிலாக கடன் வழங்கப்படுகிறது.
ஆறு மாதங்களில் கடனை திருப்பி செலுத்துவோருக்கு வட்டி இல்லை. ஆறு மாதங்களுக்கு மேல் குறைந்தபட்ச வட்டி செலுத்த வேண்டும். விருப்பம் உள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.