ரூ.2,533 கோடி மின் கட்டணம் நிலுவை வைத்துள்ள உள்ளாட்சி அமைப்புகள்
ரூ.2,533 கோடி மின் கட்டணம் நிலுவை வைத்துள்ள உள்ளாட்சி அமைப்புகள்
UPDATED : ஜூலை 26, 2025 06:38 AM
ADDED : ஜூலை 25, 2025 10:12 PM

சென்னை: மின் பயன்பாடு கணக்கு எடுத்ததில் இருந்து, மின் கட்டணம் செலுத்த, 60 நாட்கள் அவகாசம் அளித்தும், உள்ளாட்சி அமைப்புகள், 2,533 கோடி ரூபாயை, மின் வாரியத்திற்கு செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளன.
தமிழகம் முழுதும் அனைத்து பிரிவுகளுக்கும், மின் வினியோகம் செய்யும் பணியை, அரசு நிறுவனமான மின் வாரியமே மேற்கொள்கிறது. வீடுகளில் மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்பட்டதில் இருந்து, 20 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
தொழிற்சாலைகளுக்கு ஏழு நாட்கள் அவகாசம். அந்த அவகாசத்திற்குள், கட்டணத்தை செலுத்தாவிட்டால் மின் வினியோகம் துண்டிக்கப்படும். 60 நாட்கள் தெரு விளக்கு, குடிநீர் வினியோகம் உள்ளிட்ட சேவை பணிகளை மேற்கொள்வதால், உள்ளாட்சிகளுக்கு மட்டும் கட்டணம் செலுத்த, கணக்கு எடுத்த நாளில் இருந்து, 60 நாட்களுக்கு அவகாசம் அளிக்கப்படுகிறது. அப்படியும் அவை கட்டணத்தை சரியாக செலுத்துவதில்லை.
தற்போதைய நிலவரப்படி, பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய உள்ளாட்சி அமைப்புகள், 2,533 கோடி ரூபாயை, மின் கட்டண மாக செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளன. இது தவிர, வருவாய், கல்வி, காவல் உள்ளிட்ட அரசு துறைகள், 93 கோடி ரூபாய் மின் கட்டணத்தை செலுத்தாமல், நிலுவை வைத்து உள்ளன.
'ஸ்மார்ட்' மீட்டர் அரசு துறைகள், மின் கட்டணத்தை குறித்த தேதிக்குள் செலுத்துவதை உறுதி செய்ய, அனைத்து அலுவலகங்களிலும், 'பிரிபெய்டு' வசதியுடன் கூடிய, 'ஸ்மார்ட்' மீட்டரை, அடுத்த மாதத்திற்குள் பொருத்துமாறு, அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய மின் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த மீட்டரில், மின் கட்டணம் செலுத்தவில்லை எனில், தானாகவே மின்சாரம் துண்டிக்கப்பட்டு விடும். பின், பணம் செலுத்தினால் மட்டுமே, மின்சாரத்தை பயன்படுத்த முடியும். இந்த மீட்டர் பொருத்தும் பணிகளை, மின் வாரியம் இன்னும் துவ க்காமல் உள்ளது.